கடன் மறுசீரமைப்பு முறைமை ஏப்பிரலினுள் அறிவிக்கப்படும் – மத்திய வங்கி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் தொகுப்பு குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF பாராட்டு

கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் சிரேஷ்ட பிரதானி  Peter Breuer, இலங்கைக்கான செயற்றிட்டத்தின் பிரதானி Masahiro Nozaki ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வறிய மக்களை  பாதிக்கும் வகையில் தற்போதும் உயர் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் நடப்பு போக்கினை மாற்றியமமைக்கக்கூடும் என்பதுடன், பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்தமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்வதை இது எடுத்துக்காட்டுவதாகவும் நாணய நிதியம் கூறியுள்ளது.

உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதிய செயற்றிட்டத்தை இந்த மாதத்திற்குள் செயற்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நேற்றைய (03) நாணய மீளாய்வுக் கூட்டத்தின் போது நம்பிக்கை வௌியிடடமையும் குறிப்பிடத்தக்கது.

உத்தரவாதம் வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்தது இலங்கை

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடன் உதவியை பெறுவதற்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இலங்கை இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவசியமாக தேவைப்படுகின்ற 2.9 மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியமைக்காகவே இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அளுநர் இந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியுள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா தேவையான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளது இந்த கடிதத்தை அனுப்பியமைக்காக நாங்கள் முதலில் இந்திய அதிகாரிகளிற்கு நன்றியை தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளன என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் எனினும் சீனா வழங்கிய உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் சீனா உட்பட ஏனைய கடன்வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கும் நிலையில் உள்ளனர் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா அளித்துள்ள உத்தரவாதம் சர்வதேச நாணயநிதியத்தினை திருப்திபடுத்த போதுமானதல்ல என காணப்படும் ஊகங்கள் குறித்த கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம்

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது.

எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.

இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றோம் – நந்தலால் வீரசிங்க

இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவிக்கான இணக்கப்பாட்டிற்கு வந்தது.

இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்தியதுடன் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட பல மாதங்களின் பின்னர் இது இடம்பெற்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உறுதியளிக்கப்பட்ட ஐ.எம்.எப் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து உரிய உத்தரவாதங்களை பெறவேண்டும் .

கொழும்பு 2.9 மில்லியன் டொலரை எப்படியாவது பெறவேண்டிய நிலையில் உள்ளது – அது மிகப்பெரிய தொகை என்பதற்காக இல்லை – இலங்கை அந்த நிதி உதவியை வைத்துக்கொண்டு இரண்டு மாதங்களிற்கே இறக்குமதியில் ஈடுபடமுடியும்.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பயன்படுத்தி சர்வதேச அளவில் மேலும் கடனை பெறுவதற்கு இலங்கை தகுதி பெறக்கூடும்.

இலங்கை பொதுமக்களை பல மாதங்களாக வீதிக்கு தள்ளிய மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றின.

நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப போவதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இதற்காக கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கைதனக்கு கடன்வழங்கிய சீனாஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளுடன் அவர்களிற்கு வழங்கவேண்டிய மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

நாங்கள் இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான திறந்த ஒப்பிடக்கூடிய விதத்தில் பரிமாறியுள்ளோம் என இலங்கையின் பிரதான வங்கியின் ஆளுநர் இந்துவிற்கு செவ்வாய்கிழமை வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இனி அவர்கள் இது குறித்து ஆராய்ந்து தங்கள் முடிவுகளை தீர்மானித்த பின்னர் எங்களிற்கு பதிலளிக்கவேண்டும் – விரைவில் அவர்கள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் ஆரம்ப கட்ட உடன்படிக்கையை செய்துகொண்ட தருணத்திலிருந்து இலங்கையிடம் கடன் வழங்குபவர்களின் சமத்துவம் மற்றும் வெளிப்படைதன்மையின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது கொழும்பு எந்த கடன் வழங்குநர்களிற்கும் முன்னுரிமை அளிக்க கூடாது எனவும்இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிவாரணத்தை இந்த வருட இறுதிக்குள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை- இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடிப்பதே இதற்கு காரணம்.

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் சிறிது தாமதமாகின என தெரிவித்துள்ள இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர்ஒக்டோபரில் இடம்பெற்ற சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வருடாந்த காங்கிரஸ் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் தாமதமாகின என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உடன் உதவி தாமதமாவதற்கு சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் மாத்திரம் காரணமில்லை என குறிப்பிட்டுள்ள அவர்ஜப்பானும் பாரிஸ் கிளப்பும் கடன் மறுசீரமைப்பு குறித்து நன்கு அறிந்துள்ளன பல வருடஙகளாக அவை அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன இதன் காரணமாக அவை தமது ஈடுபாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன,அவர்கள் இலங்கை நிலையை ஆய்விற்கு உட்படுத்தி பாரிஸ் கிளப்பில் இடம்பெறாத இந்தியா சீனா போன்ற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளன இனி கடன் அந்த நாடுகளே இது குறித்து தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் உத்தரவாதம் கிடைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைப்பதற்கு நான்குமுதல் ஆறு வாரங்களாகும் எனவும் நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி சுயாதீனத்தன்மையை இழந்து அரசியல் மயமாக்கப்பட்டமையே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சாலிய பீரிஸ்

நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத் தன்மையை இழந்தமையும் , அரசியல் மயப்படுத்தப்பட்டமையுமே ஆகும்.

எனவே மத்திய வங்கி மாத்திரமின்றி நீதித்துறை உட்பட ஏனைய அனைத்தும் சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு மக்கள் தமது இறையான்மையைப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (10) இலங்கை மன்றக்கல்லூரியில் சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஆணைக்குழுக்களை பலப்படுத்த வேண்டும். அவற்றில் முதன்மையானது நீதி மன்றமாகும். அதே போன்று மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் , அரச சேவைகள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை வலுப்படுத்த வேண்டும். வலுப்படுத்துவதோடு மாத்திரமின்றி அவற்றை சுயாதீனப்படுத்த வேண்டும்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய இந்த ஆணைக்குழுக்களை புதிதாக நியமிக்கவுள்ளனர். இவற்றுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அரசியலமைப்பு பேரவையானது , பொறுத்தமான நபர்களைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையாகக் காணப்படுவதோடு மாத்திரமின்றி , மக்களுக்கு பொறுப்பு கூறும் நிறுவனங்களாகவும் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத்தன்மையை இழந்தமையாகும்.

மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமையானது நாடு இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொள்வதில் தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே இவ்வாறான நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்காக குரல் கொடுக்கும் போது எமக்கு பல்வேறு தடைகள் அல்லது இடையூறுகள் ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பினும் எதிர்கால சந்ததியினருக்காக நாம் இவற்றை கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

வாக்குரிமையானது இறையான்மை பலமாகும். மக்களிடமே அந்த இறையான்மை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே இறையான்மை குறித்து சிந்திக்கின்றனர். இது தவறாகும். இறையான்மை குறித்து அன்றாடம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.