கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை எட்டுவதற்கும் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன்வழங்கிய நாடான சீனா தனது எக்சிம் வங்கி இலங்கையுடன் கடன் விவகாரம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதை ஆதரிக்கின்றது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் ஒருவருடத்திற்குள் நிறைவேற்றப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ள நிலையில், பெரும்பாலும் ஒருவருடகாலத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் இன்றும், நாளையும் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வாய்மொழி மூலம் விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி இதுகுறித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எழுத்துமூல அறிக்கையும் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நேர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், ‘இருதரப்பினரும் மீறல்களில் ஈடுபட்ட அதேவேளை, இது முன்நோக்கிப் பயணிப்பதற்கான தருணம்’ என்ற கோணத்தில் நிலைமாறுகாலநீதியை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளகப்பொறிமுறைகளை அரசாங்கம் ஸ்தாபித்தது.

இந்தப் பொறிமுறைகள் ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்தின.

அதன் ஓரங்கமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், மரணங்களைப் பதிவுசெய்தல், காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டம், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்பன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டன.

மேலும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும். அதுமாத்திரமன்றி பெரும்பாலும் ஒருவருடத்திற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

அடுத்ததாக நினைவுகூர்தல் என்பது நல்லிணக்க செயன்முறையின் இன்றியமையாததோர் அங்கமாகும். அதற்கான வாய்ப்பை மறுப்பதென்பது இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்குமே வழிவகுக்கும்.

அதன்படி இராணுவத்தினரின் குடும்பங்களைப்போன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்றும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்துள்ளோம். அதற்கமைய இப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் ஆணைக்குழுவின் வகிபாகம், மரணதண்டனைக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பெண்கள்மீதான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதில் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கடன்உதவியை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை

இந்தியாவின் ஒரு பில்லியன்டொலர் கடனை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் கடனுதவி மார்ச் 17 ம் திகதி முடிவடைகின்ற நிலையில் இலங்கை அதில் மூன்றில் இரண்டை மாத்திரம் பயன்படுத்தியுள்ளது. மருந்துகளிற்கும் உணவுகளிற்கும் மாத்திரம் இலங்கை அதனை பயன்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான நிதி உதவியை வழங்க சர்வதேச நாணயநிதியம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இந்த வருடத்திற்கான நிதிகளை பெறுவதற்கானமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள்இடம்பெறுகின்றன என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடனில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளநிலையில் இலங்கைஇந்த கடனுதவியை ஆறு முதல் 10 மாதங்களிற்கு நீடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை, இந்திய பொருளாதார பரிவர்த்தனைக்கு ரூபாயை பயன்படுத்த ஆலோசனை

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளதாவது.

“இந்தியாவும், இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பேங்க் ஆப் சிலோன், எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள் இதுதொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க உதவும் முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதன் மூலம் குறைவான பரிமாற்ற செலவு, விரைவான சேவை, வர்த்தக கடன்கள் எளிமையாக பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இலங்கை மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் கணிசமான அளவில் ஆதாயம் ஏற்படும் என்பதுடன் நட்புறவு மேலும் நெருக்கமாகும்.” என் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்

தெற்காசியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்றுடன் 2204 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியப்பிராந்திய நாடுகளில் இவ்விவகாரம் தொடர்பில் பணியாற்றிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து, இயலுமானவரையில் தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களையும் உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு இலங்கையைத் தளமாகக்கொண்டியங்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு; பங்கேற்காத இலங்கை, இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை.

ஜேர்மனி முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, மாலி, எரித்திரியா மற்றும் நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன.

சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை

இந்திய அரசால் மேலும் 50 பேரூந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிராமிய பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

பொருளாதார மீட்சிக்காகவும், இலங்கையின் கிராம புற அபிவிருத்திக்காகவும் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்றைய தினம் (5) 50 பேருந்துகளுக்கான ஆவணங்களை கையளித்தார்.

இலங்கையின் கிராம புறங்களின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் 75 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 40 பேருந்துகள் பதிவு நடவடிக்கைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 500 பேருந்து செயற்றிட்டத்தை எதிர்வரும் மாதத்துடன் நிறைவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற பேருந்துகளை கிராமபுற போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு துரிதமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

Posted in Uncategorized

சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும் அமுல்படுத்தப்பட்டது – ஐ. நா.க்கு இலங்கை பதில்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கின்றபோதிலும், அம்மீளாய்வின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகளையும், சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது.

இம்மீளாய்வுக்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்ததுடன், மனித உரிமைகள் விவகாரத்தில் அதன் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின்போது முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகள் மற்றும் சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களின் அமுலாக்கம் பற்றிய தகவல்களை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டின் பின்னரான மீளாய்வு காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அவ்வாறிருப்பினும்கூட ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் அடங்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் உருவாக்கம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரகடனங்கள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதற்கான இணக்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் வலுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கொவிட் – 19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை வலுவான முன்னேற்றத்தைப் பதிவுசெய்தது. அதன்படி 163 நாடுகளில் 70.0 என்ற புள்ளியுடன் இலங்கை 76 ஆவது இடத்தைப்பிடித்தது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உபகட்டமைப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதை முன்னிறுத்தியும் காலநிலைமாற்ற சவால்களை திறம்பட எதிர்கொள்வதை  இலக்காகக்கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அந்த 19 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு குறைந்தளவிலான ஒதுக்கீடு

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா இல்லையேல் இலங்கை மோசமான விளைவுகளைச் சந்திருக்கும் – மிலிந்த மொராகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட கடந்த 22 மாதங்களில் மூன்நு தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை- அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றது எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.