துமிந்த சில்வாக்கு வழங்கிய மன்னிப்பை நியாயப்படுத்தும் கோத்தபாய

‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகளினால் தான் பொது மன்னிப்பு பெற்றுக்கொடுத்ததாக வெளிப்படுத்தப்படும் கருத்தை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குடன் தொடர்புடைய வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனதுபக்க நியாயத்தை முன்வைக்கும் ஆவணத்தை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மேலும் சில காரணங்கள் எனக்கு நினைவிருக்கின்றன. அதேபோன்று, அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தது என்பதும் எனக்கு நினைவிருக்கிறது” என்று அந்த பத்திரத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டுக்காகவே தான் செயற்பட்ட தாகவும் முன்னாள் ஜனாதிபதி அதில் தெரிவித் திருக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட ஜனாதிபதி மன்னிப்பை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (17) வழங்கப்பட்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த ஆவண வாக்குமூலம் அமைந்துள்ளது.

அந்த ஆவணப்பத்திரத்தில் வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்லா நேரங்களிலும் நாட்டின் நலன்கருதியே செயற்படுகிறேன். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணமாக மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவதை மறுக்கிறேன்.

இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரும் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

கூறப்பட்ட சூழ்நிலையில், என் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் பரிசீலித்து, அரசியலமைப்பில் வழங்கப்பட்டு அதிகாரங்களை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தினேன் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

துமிந்தவுக்கு கோத்தபாய வழங்கிய பொதுமன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

Posted in Uncategorized

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறச்செய்வது என்பது சாத்தியமற்ற விடயம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது ஜேவிபி காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்டகாலம் வரை நீள்கின்றது என்பதை மனித புதைகுழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஜேவிபி காலத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது யுத்தத்தின் இறுதியில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லத யுத்தமுடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கால மனித புதைகுழி ஆவணங்களை அழிக்க கோத்தா உத்தரவிட்டார்; சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு!

1989ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கிளர்ச்சிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது, தான் இராணுவ அதிகாரியாக செயற்பட்ட பகுதியில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இரகசிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டி எடுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அது கூறியது.

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எதுவுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடப்படவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர், குடும்பங்களின் சட்டத்தரணிகள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை மற்றும் மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒருவர் தண்டிக்கப்பட்டார், பின்னர் அவர்கள் மன்னிக்கப்பட்டனர், அது கூறியது.

“இது அரசியல் விருப்பமின்மையின் கதை – போதுமான சட்ட கட்டமைப்பு, ஒரு ஒத்திசைவான கொள்கையின் பற்றாக்குறை மற்றும் போதுமான ஆதாரங்கள் இல்லாதது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அது தீர்க்கப்படாத சோகத்தின் கதை; இழந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்காமல் வாழவும் இறக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ”என்று அது கூறியது.

மனிதப் புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் உள்ள தாதமதத்தில் ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அது கூறியது.

2013 ஆம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து காவல்துறை பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய சக்திவாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக அறிக்கை கூறுகிறது.

1989 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது, ஒரு இராணுவ அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ச, இந்த பிராந்தியத்தில் பணியாற்றியிருந்தார்.

விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ராஜபக்ச மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

கோட்டாவை ஜனாதிபதியாக்கிய முடிவு தவறானது – ரோஹித அபேகுணவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் தொடர்பிலேயே இதன்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானிலுள்ள இல்லத்திற்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பிலேயே   வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவிற்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.