IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே – விஜயதாச ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை காரணமாக இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையில் இருந்து பிரிந்து சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டு இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கும் என்றார். இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும், நமது நாட்டிற்கான கடன் தொகையைப் பெறுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இம்மாதம் கிடைக்காது – ஹர்ஷ டி சில்வா

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022ஆம் ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளை பதிவு செய்துள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் ஒருசில கடுமையான தீர்மான்களை எடுத்தது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத காலத்தில் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

கடன் வழங்குநர்களுடான பேச்சுவார்த்தையில் குழப்ப நிலை. IMF கடனுதவி மேலும் தாமதமாகும் – செஹான்

நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான சர்வதேச பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

2022 முடிவடைவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் ஜனவரியில் கிடைக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இலங்கை சர்வதேச சந்தையில் டொலர் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் காலம் அவசியமானது.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்கு முன்னர் இந்த நிதியுதவியை பெறுவதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கதெரிவித்துள்ளார்

அரசாங்க தரப்பிலிருந்து எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இழுபடுவதால் இந்த தாமதம் இது குழப்பமான செயற்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் அவர்கள் மேலும் சில தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர், நாங்கள் நிச்சயமாக கடன்வழங்குநர்களின் அங்கீகாரத்தை பெறுவோம் ஆனால் எப்போது என்பது தெரியாது என செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன்வழங்கிய தரப்புகள் கடன் மறுசீரமைப்பு குறித்து எங்களிற்கு எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எங்களிற்கு உதவ தயார் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது ஆனால் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு ஏனைய திறன்களுக்காக பயிற்சியளிக்கவும் விருப்ப ஓய்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சும் முப்படைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலமொன்றை 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், முப்படைகளின் செயற்பாட்டுடன் தொடர்பில்லாதிருக்கும் நபர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை செய்யாது விட்டால் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றப்படத் தகுதியுடையவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசைப் படையினர் உட்பட இதுவரை 16, 141 பேர் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகளை உடையவர்கள் 96 பேர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் விண்ணப்பங்களைச் அனுப்பியவர்கள் பற்றிய பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க குறிப்பிடுகையில், 983 விமானப்படை வீரர்கள் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதுடன், 732 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்படையால் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது – ரொய்ட்டர்ஸ் தகவல்

சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாட்டின் நிதியத்தின் பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் IMF பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின் ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீனா துரிதப்படுத்தவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீன துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜி20 பொதுகட்டமைப்பு தொடர்பிலும் விசேடமான சில நிலைமைகள் தொடர்பிலும் நாங்கள் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்பியா இலங்கை தொடர்பான கடன் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் சர்வதேச நாணயநிதியமும் ஏனைய சர்வதேச கடன் நிதியமைப்புகளும் நிதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை தொடர்பான மாநாடு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக் கொள்ள உள்ளமையுடன் தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடு வியாழக்கிழமை (டிச.08) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது.

‘உலகலாவிய பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சீன அதிகாரிகன் , உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பீஜிங் மாநாட்டில் சீன அதிகாரிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடன் நெருக்கடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பீஜிங் மாநாட்டில் பங்கேற்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதானிகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமையவே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகள் குழுவொன்று பீஜிங்கிற்கு விஜயம் செய்துள்ளது.

‘ இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா சாதகமான முறையில் செயற்படும் என்று அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized