பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவால் பூர்த்தி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

கொழும்பு துறைமுக அபிவிருத்திப் பணிகளில் மீண்டும் சீனா

150 மில்லியன் டொலர் முதலீட்டில் பொது – தனியார் பங்காளித்துவமாக முன்மொழியப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் முதல் கட்டத்தை இலங்கை முன்னெடுக்க உள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவில் சேவை வழங்கல் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முனைப்புடன், துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் மதிப்பீட்டின்படி, தென் முனையதிற்கு சொந்தமான Battenberg மற்றும் Bloemendhal சேவை விநியோகப் பகுதிகள் பொது – தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.

அதன்படி சைனா மெர்ச்சன்ட் போர்ட் கம்பெனி, கொழும்பு இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல்ஸ் கம்பெனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைக்க சீனா இணக்கம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவை இலங்கையின் கடன்களை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் எனவும் சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக  இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்டோ அதிகாரத்துடன் அதிகளவு பங்குகளை கொண்டுள்ளது யார்? 2020 இல் 3 டிரிலியன் டொலர்களிற்கு மேல் டொலர்களை அச்சடித்தது யார்? இலங்கை வங்குரோத்து நிலையை அடைத்ததும் உடனடியாக தனது நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தது யார் என்பதே இந்த கேள்விகள்

சீனாவிடமிருந்து அரிசி டீசல் மருந்து பாடசாலை சீருடைகளிற்கான துணி போன்றவற்றை இலங்கை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் இலங்கை மக்களிற்கு உதவுவது என்ற வாக்குறுதியிலிருந்து அமெரிக்கா எவ்வாறு பின்வாங்கியுள்ளது என்பது குறித்து பொதுமக்கள் அறிய விரும்புவார்கள்.

சீனா எந்த நிபந்தனையும் அற்ற அர்ப்பணிப்பு செயற்பாடுகளை பின்பற்றும் அதேவேளை அமெரிக்க உதவிக்கு ஏன் முன்நிபந்தனைகள் என கேள்வி கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள்.

சுயபரிசோதனையை மேற்கொள்வதற்கு பதில் பாழாக்கிய குற்றச்சாட்டுகளை எங்கள் அமெரிக்க சகா முன்வைப்பது கபடநாடகம் அல்லவா?

இலங்கை ஒரு நல்ல சூழ்நிலையில் இருப்பதற்கு அவசியமான தீர்க்ககரமான தீர்மானங்களை ஏன் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் எடுக்கவில்லை.

அல்லது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கசப்பை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள் அச்சிடும் மிகப்பெருமளவு டொலரிலிருந்து ஏன் அவர்கள் இலங்கைக்கு நிதியை வழங்கவில்லை.

வெளிநாட்டு விரிவுரையின்றி  எங்களை பாழ்படுத்துபவர்கள் யார் என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய புத்திசாலிகள் இலங்கை சீன மக்கள் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து சாதகமான சமிக்ஞை – ஷெஹான்

சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன உயர் மட்டக் குழு இன்று இலங்கை விஜயம்

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (சனிக்கிழமை) இலங்கை வரவுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் அவர்கள் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே – விஜயதாச ராஜபக்ச

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை காரணமாக இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையில் இருந்து பிரிந்து சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டு இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கும் என்றார். இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும், நமது நாட்டிற்கான கடன் தொகையைப் பெறுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் கொவிட் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டும்- உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் ஆராய விரும்புகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனைகளை விதித்துள்ளன, ஏனெனில் அவர்கள் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

மேலும், சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் சோதனையை வழங்க வேண்டும்.