ஜே.வி.பி- ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் யாழில் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(16) யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய மீன்பிடி, தமிழர் நில, கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்ப்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், இலங்கையி்ல் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன், ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாக்கு நீரிணை இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறின் முதலில் அழியப்போவது தமிழர்களே- எச்சரிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத் தமிழர்கள்தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் இடம்பெறுவதாவது:

இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா. தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

சீனா போன்ற ஒரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரச் செய்து, பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி, அதனூடாக முழு இலங்கையையும் பாக்கு நீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்.

அதன் ஆரம்ப கட்டம்தான், வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொண்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து, அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள்.

இன்று அட்டை வளர்க்கும் கடல் பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலைத் தன்மையினை இழந்து வருகின்றன. அந்த பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு, அவர்களின் பொருளாதாரம், எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

திருகோணமலையையும் பாக்கு நீரிணையையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும். இதன் நிமித்தமே போர்த்துக்கீசர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், வென்றார்கள், ஆண்டார்கள், சென்றார்கள்.

ஆனால், சீனாவின் நகர்வு வெற்றி பெறுமானால், ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டுச் செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீனமயமாகும்.

இந்தியா ஒரு மெத்தனப் போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என எண்ணுகிறது. அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர்களின் வருகையின்போதும் தமிழ் தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமை ஆகும்.

பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை, இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.

ஈழத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் மிக்க பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத்தமிழர்கள்தான். அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்கப் போவதில்லை என்பதை வலுவாக பதிவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

சரத் வீரசேகரவின் தமிழர்களை மிரட்டும் தொனியிலான கருத்துக்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானம்

இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவு தூபியில் தமிழர்களையும் நினைவு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாக னநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று யாழில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இனவாதியான சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிடுவதாகவும் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் க.துளசி குறிப்பிட்டுள்ளார்

புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் எமது ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு ஒன்றையும் நடத்தி இருக்கின்றது.

இதேவேளை தமிழ் தேசிய அரசியல் கட்சிகளோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகிக்கின்றோம். கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள்.விசாரணையின் பின்னர் 15 ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்ப அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்கள்.

எனினும் கட்சி பணிகள் உள்ளதால் குறித்த திகதியில் என்னால் வரமுடியாது பிறிதொரு திகதியில் வருவதாக கூறியிருந்தேன்.எனினும் அவர்கள் 16ஆம் திகதி மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.மூன்று பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர்.என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டும் வகையில் இவர்களது விசாரணை அமைந்திருந்தது.குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்று அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவு போன்று காட்டிக் கொண்டாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்றது.அக்டோபர் மாதம் 10ஆம் தேதி டெல்லியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் நான் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரித்தார்கள்.குறித்த மாநாட்டில் பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்,மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் உரிமை, 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களை நான் இந்தியாவிடம் வலியுறுத்தி இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சி இந்தியா எவ்வாறன ஆலோசனைகளை வழங்குகின்றது.

இந்தியா பணம் வழங்குகின்றதா? போன்றவற்றை இவர்கள் விசாரணைகளின் போது கேட்டிருந்தார்கள்.இந்தியா இங்கு என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நான் கூறினேன். இந்திய அதிகாரிகளை சந்தித்தால் அவர்கள் இலங்கை நாட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வினை விரும்புவதாக என்று கூறுவார்களேயொழிய தமிழ் மக்கள் தொடர்பாக எந்த விதமான கருத்துக்களை அவர்கள் கூறுவதில்லை என்றேன்.

குறிப்பாக இந்தியா பணத்தினை தந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட சொல்கின்றதா என்ற தொனியில் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய அரசாங்கம் இலங்கை பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்தித்தபோது இலங்கைக்கு முதலாவதாக உதவி செய்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டிருந்தது. என்பதனையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவர்களின் இத்தகைய விசாரணைகள் தொடர்பாக இந்திய தூதரகம் மற்றும் ஏனைய தூதரகங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு நாங்கள் இவர்களின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.குறிப்பாக சில தமிழ் அரசியல்வாதிகளும் போராளிகளை காட்டிக் கொடுத்து அரசுடன் இணைந்து சதி முயற்சி செய்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்திருக்கின்றன.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் போராளிகள் மீது இவ்வாறு கட்டவிழ்த்து விடப்படும் விசாரணைகள் தொடர்பில் மௌனம் காக்காது அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம்,தியாகி திலீபன் நினைவு தினம்,மாவீரர் நாள் நினைவு தினங்களை நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள்? பணம் யார் வழங்குகிறார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியிருந்தார்கள்.இதற்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் மூலமே நாங்கள் இத்தகைய விடயங்களை செய்கின்றோமேயொழிய எந்த ஒரு நாட்டினுடைய நிதி பங்களிப்பில் இத்தகைய நிகழ்வுகளை செய்வதில்லை என்பது தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இந்தியா உங்களுக்கு பணம் வழங்குகின்றதா? என்பது தொடர்பில் அவர்களுடைய கேள்வி அமைந்திருந்தது.

குறிப்பாக ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய ஆவணங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறியிருக்கின்றார்கள் அதற்கு நான் கூறுகின்றேன் எங்களுடைய ஆவணங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறினேன்.தினமும் ஆவணங்களை வழங்குமாறு தொலைபேசி அழைப்பு எடுத்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம். ஜனநாயக ரீதியாக செயல்படுகின்ற எங்களை நீங்கள் இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் எம்மை கட்டுப்படுத்த முயற்சித்தால் அது வேறு விளைவினை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

குறிப்பாக இந்தியா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவா தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டார்கள். குறிப்பாக ஆயுதம் பணம் என்பவற்றை வழங்கி மீள் உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்களா? என்றும் அவர்கள் கேட்டார்கள் – என்றார்.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் : ஜனநாயக போராளிகள் அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.கதிர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்துவமாக தேர்தலில் போட்டியிட்டுவதற்கு தயாராகி வருகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 49 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தந்தை செல்வாக்கு பின்னர் அந்த கட்சி செயலிழக்கப்பட்டு ஒரு சந்தர்ப்பவாத அரசியல் போக்கோடு செயல்பட்டது.

நான் நினைக்கின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம்.

இன்று தமிழரசுக் கட்சி தனித்துவமாக முடிவை எடுத்து ஒரு தொழில்நுட்பம் முறை என்றும் ராஜதந்திர முறை என்றும் கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிக்கொண்டு, வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களுடைய சின்னம் என்றும், தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களுடைய தாய் கட்சி என்றும் வலியுறுத்தி ஊடகங்களிலே செய்து வெளியிட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு இங்குநிற்கின்றது.

அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, பிளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக குற்றுவிளக்கு சின்னத்தில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.

இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் ஐயா விலக்கப்படுகின்றார் ,கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார்.

சம்பந்தன் ஐயா வெறுமனே திருகொணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது கூட்டுத் தலைமைத்துவமாக மிக விரைவில் அறிவிக்கப்படும்.

உண்மையாக தலைவர் அவர்களுடைய சிந்தனைக்கும் தலைவர் அவர்களுடைய நம்பிக்கைக்கும் மிக மோசமான ஒரு குரோதத்தனமான வேலையை செய்து இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு நோக்கமாக இருக்கின்றது இந்த கூட்டமைப்பையும் அழித்து மிதவாத அரசியல்வாதிகளையும் தங்கள் வசப்படுத்தி தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு உண்மையாக தமிழரசுக் கட்சி துணைபோகி நிற்கின்றது.

இந்த நிலையில் இன்று தமிழரசு கட்சி மக்களுக்கு செய்திருக்கின்ற மிக மோசமான துரோகத்தனமான செயற்பாட்டை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டு வருகின்ற தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்தி கூறுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கும் மக்களுக்கு நாங்கள் பணியாற்றுவதற்கும் முழுமையான உரிமை உரித்து உடையவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்.

அந்த வகையிலேயே இந்த கருத்தை மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்”என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized