ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் வெற்றி

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை  உள்ளடக்கி, அவரது சிந்தனையில்  உருவான  செயற்றிட்டம்  வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற  நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன்  அனைத்தையும் இழந்து, அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  அர்ச்சிகனுக்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தமிழ்மொழியைப் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ ; இந்திய மத்திய அரசு திட்டம்

தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இந்தி பிரச்சார சபாவை போல் அனைத்து மாநிலங்களிலும் இதனை அமைக்க மத்திய அரசு அதிரடி திட்டம் வகுத்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழியை பரப்புவதற்காக சென்னை, தி.நகரில் 1918-ம் ஆண்டில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில், இந்த நிறுவனத்தை அன்னி பெசன்ட் அம்மையார் 1918-ம் ஆண்டு, ஜூன் 17-ல் தொடங்கி வைத்தார். இந்தியை ஊக்குவிக்க மகாத்மா, தனது மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பி, இங்கு தங்கவைத்து பிரச்சாரமும் செய்திருந்தார். மகாத்மாவும் தி.நகரில் 10 நாட்கள் தங்கி அதன் நிர்வாகத்தை நேரடியாக கவனித்துள்ளார்.

இதன் கிளைகள் திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் 6,000 வரை வளர்ந்துள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இது உள்ளது. இங்கு பல்வேறு நிலைகளில் இந்திமொழிக் கல்வி நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்தவகையில், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இதன் கிளைகள் வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சான்றிதழ், பட்டயப்படிப்பு என பல வகையில் தமிழ்க் கல்வி போதிக்கப்பட உள்ளது.

இதை இதுவரை எவரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக மத்திய அரசு அமைக்கிறது. இந்தி பிரச்சார சபாவை போலவே இதை அமைத்து மத்திய அரசின் நிதியை அதற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தி பிரச்சார சபா போன்று தமிழ் பிரச்சார சபாவையும் தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழு நிர்வகிக்க உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழ் பிரச்சார சபா என்பது பிரதமரின் யோசனை. அவருக்கு தமிழ் மொழி மீதுள்ள ஈடுபாட்டினால் இந்த சபா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

தமிழ் பிரச்சார சபாவுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிரச்சார சபா மூலம் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில், “தமிழ் உலகின் பழமையான மொழி” என்று கூறி பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இத்துடன் நின்றுவிடாமல், எவரும் செய்யாத வகையில், தமிழை வளர்க்க அவர் தமிழ் பிரச்சார சபா தொடங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயற்சித்த ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக மோசடியை ஒடுக்கும் நடவடிக்கையில், சென்னையில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது ஏராளமான பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் தேசிய புலனாய்வு மையம் கைப்பற்றியுள்ளது.

2022 ஜூலை இல் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை தொடங்கியது தேசிய புலனாய்வு மையம் இதுவரை 14 நபர்களை கைது செய்துள்ளது.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் 6.8 மில்லியன் இந்திய ரூபாய், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் ஒன்பது தங்க கட்டிகளும் அடங்குவதாக தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.

சோதனைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கை அகதி ஒருவரின் சார்பாக போதைப் பொருள் வர்த்தகத்தை நிர்வகித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவை மீட்டெடுப்பதே முதன்மையான செயல்திட்டம் – தமிழக அரசு

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய கடற்றொழிலை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளது. இது தமிழக கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே கவலை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்பப் பெறுவதும், பாக்கு நீரினை பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டத்தில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்கும் இடையிலான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன்மூலம் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு 3 கோடி பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமர் பாலம் ஊடாக அழைத்து வந்தால் அதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

திட்டமிட்டபடி ஏப்ரல் 29 இல் காரைக்கால் படகுச்சேவை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.

திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.

காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் – தொல்.திருமாவளவன்

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.

தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது.

கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் எண்மர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் 5 பெண்களும் 2 சிறார்களுமே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள் 8 பேரும் மன்னாரில் இருந்து நேற்றிரவு படகு மூலம் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழக கடலோர காவற்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு தனுஷ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணைகளையடுத்து மண்டபம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இதுவரைக்காலமும் பறிமுதல் செய்யப்பட்ட 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதுபோன்று இடம்பெறும் சம்பவங்கள் ஏழை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது என்றும் அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகின்றபோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.