இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும்.

பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது  கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – மதுரை இடையே விரைவில் விமான சேவை – நிமல் சிறிபால டி சில்வா

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம்.

வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே நடத்தப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் சேவை யாழ்ப்பாணத்திற்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காகத் துறைமுகத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காரைக்கால் இந்தியாவின் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

பயணிகள் கப்பல் சேவை முதலில் காரைக்காலில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோதும், அந்தத் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுவதால், அது பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது. கரித்தூசு அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்தோடு காரைக்காலில் இருந்து சென்னையை அல்லது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை அணுகுவதற்கான போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவானவை என்ற காரணத்தாலும் அந்தத் துறைமுகத்தைத் தடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாகப்பட்டினம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் பயணிகளைக் கையாள்வதற்கு ஏற்றது என்பதுடன் அங்கிருந்து சென்னைக்கு நாளாந்தம் இரு நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன என்றும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைஅடைவதற்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவையை நடத்துவது என்று தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான டெர்மினல் அமைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்துமாறும் இந்திய மத்திய அரசு தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கோரியது. ஆனால், இந்த ஆண்டுக்கான தமது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனி அடுத்த ஆண்டே இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு கைவிரித்துவிட்டது. இதையடுத்து இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கென 9 கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. பயணிகள் டெர்னிமல் பகுதி தயாரானதும் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கும்; இந்திய துணைத்தூதர் நம்பிக்கை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

சென்னை – இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை ஆரம்பம்

 சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர்.

அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

யாழ்- சென்னை விமான சேவை 100 ஆவது நாள் கொண்டாட்டம்

யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவியது.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை சரி செய்வதற்கும் இரு நாட்டு விமான சேவை வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி “இந்தியாவுக்காக நான் கனவு காணும் எதிர்காலம் எமது அண்டை நாடுகளுக்கும் நான் விரும்பும் எதிர்காலம்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized