இரண்டாவது மீளாய்வுக்கு ஐ.எம்.எப். ஒப்புதல்

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளது.

எனவே, சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் மற்றும் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த இது வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளது

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்கு தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளை பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளை பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.

ரெலோவின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

15 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிமனையில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்களின் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் முன்னாள் யாழ்ப்பாண மாநகர பிரதி மேயர் ஈசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் இருந்து மீண்டு வந்த போரின் சாட்சியமான சபா குகதாஸ் நினைவுரை ஆற்றினார்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வ அஞ்சலி: சர்வதேச மன்னிப்புசபை செயலாளரும் அஞ்சலி

2009 இல் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இன்று முள்ளிவாய்க்காலில் உணர்வபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

கடந்த ஓரிரு ஆண்டுகளை விட இம்முறை அதிகளவான மக்கள் நினைவஞ்சலியில் கலந்துகொண்டார். காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தவர்கள் நினைவாக தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்ணீர், அழுகையென அந்த பகுதியே சோகத்தில் மிதந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், செ.கஜேந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான எதிர்வரும் 18 ஆம் திகதியை தமிழர் தாயகமெங்கும் தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்

ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அதே நேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்புரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம்.

மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம்.

பல்கலைக்கழக மாணவர் எற்பாடு செயதுள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம்.

வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக லெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமுதினி படுகொலையின் 39 ஆவது நினைவேந்தல்!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூவியில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடர்அ ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தில் மறைந்த தலைவர் சிறீசபாரத்தினத்தினம் நினைவஞ்சலி நிகழ்வு

1986 சித்திரை 29 – வைகாசி 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் 300 க்கும் அதிகமான வீரமறவர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் (08.05.2024) நேற்றைய தினம் மாலை 6.00 மணிக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலியும் நினைவுப்பேருரைகளும் நடைபெற்றது.

 

ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 38 ஆவது அஞ்சலி நிகழ்வு அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான அன்னங்கை, கோண்டாவிலிலும் யாழ் ரெலோ அலுவலகத்திலும் இடம்பெற்றது.

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்தின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைலரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர் (வேலாயுதம் நல்லநாதர்) வியாழக்கிமை (22) இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இணந்திருந்து – தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மூத்த போராளியே ஆர்.ஆர் ஆவார்.

அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ஆர்.ஆர். இன் வித்துடலுக்கான வணக்க நிகழ்வுகள் -16 ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (24) காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8 மணி தொடக்கமும் நடைபெறும்.

பின்னர், முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்விகள் நடைபெற்று ஆர்.ஆர். இன் வித்துடல் வவுனியா கோவில்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இடம்பெற்றது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

அடுத்து, இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையால் பாதிப்புக்குள்ளான மக்கள், துயரிலிருந்து மீள முடியாமலும், பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர்

சுப்பையா சேதுராசா

அழகுதுரை பரமேஸ்வரி

அருமைத்துரை வள்ளிப்பிள்ளை

கிட்ணன் கோவிந்தன்

அருணாசலம் தங்கவேல்

செல்லத்துரை பாக்கியராசா

வடிவேல் நடராசா

இராஜேந்திரம் கருணாகரம்

சண்முகநாதன் நிதாந்தன்

இராமஜெயம் கமலேஸ்வரன்

கந்தப்போடி கமலாதேவி

சிவக்கொழுந்து சின்னத்துரை

சிவபாக்கியம் நிசாந்தன்

பாக்கியராசா வசந்தினி

அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி

தங்கவேல் கலாதேவி

ஸ் ரீபன் பத்துமா

சுந்தரலிங்கம் பிரபாகரன்

சுந்தரலிங்கம் சுபாஜினி

கனகராசா சுவாதிராசா

சுப்பிரமணியம் பாக்கியம்

விநாயகமூர்த்தி சுதாகரன்

ஆனந்தன் அன்னம்மா

விஜயகாந் லெட்சுமி

அருமைத்துரை தனலெட்சுமி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தவர்கள் ஆவர்.