குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இடம்பெற்றது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

அடுத்து, இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையால் பாதிப்புக்குள்ளான மக்கள், துயரிலிருந்து மீள முடியாமலும், பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர்

சுப்பையா சேதுராசா

அழகுதுரை பரமேஸ்வரி

அருமைத்துரை வள்ளிப்பிள்ளை

கிட்ணன் கோவிந்தன்

அருணாசலம் தங்கவேல்

செல்லத்துரை பாக்கியராசா

வடிவேல் நடராசா

இராஜேந்திரம் கருணாகரம்

சண்முகநாதன் நிதாந்தன்

இராமஜெயம் கமலேஸ்வரன்

கந்தப்போடி கமலாதேவி

சிவக்கொழுந்து சின்னத்துரை

சிவபாக்கியம் நிசாந்தன்

பாக்கியராசா வசந்தினி

அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி

தங்கவேல் கலாதேவி

ஸ் ரீபன் பத்துமா

சுந்தரலிங்கம் பிரபாகரன்

சுந்தரலிங்கம் சுபாஜினி

கனகராசா சுவாதிராசா

சுப்பிரமணியம் பாக்கியம்

விநாயகமூர்த்தி சுதாகரன்

ஆனந்தன் அன்னம்மா

விஜயகாந் லெட்சுமி

அருமைத்துரை தனலெட்சுமி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தவர்கள் ஆவர்.

ரெலோ கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி

மனிதநேயம் மிக்க புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் நலன் விரும்பியும் இன விடுதலைக்கு போராடுகின்ற அனைத்து போராளிகள் இயக்கங்களோடும் நெருக்கமான உறவுகளை பேணியிருந்தாலும் ரெலோ இயக்கத்திற்கு முதன் முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து முதன் முதலில் (எழும்பூரில் 1984) நட்சத்திர கலைவிழாவை முன்னின்று நடத்தி நிதி திரட்டி வழங்கியிருந்தார்.

கப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது 100 வது திரைப்படத்தை “விடுதலைப்புலிகள்” என்ற பெயருடன் வெளியிடுவதற்க்காக பதாகைகள் பரவலாக வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய காலத்தில் அனைத்து இயக்கங்களையும் விடுதலைப்புலிகள் என்றே அழைக்கப்பட்ட அந்த காலத்தில் ஈழப்போராளிகள் நலன் விரும்பி ஒருவரால் சில காட்சிகளை அத்திரைப்படத்தில் நீக்கக்கோரி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதால் அத்திரைப்படத்தின் கதாநாயகன் பெயரும் கதாபாத்திரத்தையும் இணைத்து கப்டன் பிரபாகரன் என்று அத்திரைப்படத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கப்டன் அவர்களின் இழப்பு இலங்கைத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மனிதநேயத்தை நேசிக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அந்தவகையில் கப்டன் அவர்களுக்கு 02.01.2024 அன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி செய்து நினைவு கூரப்பட்டார்.

4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

04 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை உறவுகளின் 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

மதத்தலைவர்களாகிய வேலன் சுவாமிகள், மறவன் புலவு சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு முதன்மையான பிரதான சுடரினை ஏற்றினர். பின் மலர்மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.

இவ் நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுரேஷ்பிரேமசந்திரன், மாகாணசபை உறுப்பினர்களாகிய கஜதீபன், சர்வேஸ்வரன், யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வராகிய இமானுவேல் ஆனனோல்ட், வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.

உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க அனுமதிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

‘‘பிக்குகளுக்கு அவதூறு ஏற்படுத்த ஒருசிலர் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கக் கூடாது. அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் நாடுகளுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாடு சுத்தமாக தேரவாத பெளத்தத்தை பாதுகாத்துவரும் நாடாகும். இதனை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். எமது அரசர்கள் ஒவ்வொருவரும் பெளத்த சாசனத்தை பாதுகாக்கவே யுத்தம் செய்தார்கள். சாசனத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே இதனை பாதுகாக்க வேண்டியது சிங்கள மக்களின் முக்கிய பொறுப்பாகும். தற்போதுள்ள இளைய பிக்குகள் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா போன்ற சகல நாடுகளும் பெளத்த நாடுகளாகும். ஆனால் அந்த நாடுகள் இன்று பெளத்த நாடுகள் இல்லை. அதற்கு காரணம் அவர்கள் சாசனத்தை பாதுகாக்கவில்லை. நாம் சாசனத்தை பாதுகாத்தமையின் காரணமாகவே, 2500 வருடங்கள் கடந்தும் எமது நாடு இன்றும் பெளத்த நாடாக இருக்கின்றது. அந்த சாசனத்தை பாதுகாப்பதற்கான முழு பொறுப்பு இன்று பிக்குகளுக்கும் இருக்கிறது. ஒருசில பிரதேசங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் பிக்குகளை பராமரித்தாலும் அநேகமாக சிங்கள மக்களே அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். சிங்கள மக்கள் இலங்கையிலேயே வாழ்கிறார்கள். நாடு சிக்கலுக்குள்ளானால் சிங்கள மக்களும் சிக்கலுக்குள்ளாகுவார்கள். சிங்கள மக்கள் சிக்கலுக்குள்ளானால் பிக்குகளின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் இருப்பு சிக்கலுக்குள்ளான பெளத்த சாசனமே இல்லாமல் போகுமளவுக்கு சிக்கல் நிலை ஏற்படும். அதனால் மொத்த தர்மமும் இல்லாமல் போய்விடும். அதன் காரணமாகவே எமது நாட்டில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிக்குகள் முன்னிருந்தார்கள்.

மன்னர் காலத்தில் இடம்பெற்ற போர் நிலைமைகளின்போது போருக்கு பிக்குகள் ஆதரவாக இருந்தமைக்கு காரணம் பெளத்த சாசனத்தை பாதுகாப்பதற்காகவாகும். இவ்வாறு எமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகள் தவறு செய்துவிட்டால் அல்லது குரலை உயர்த்தி பேசிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பிக்குகளை எமது தேசத்தின் முன்னோர்களாக கருதுகிறோம். அவ்வாறெனில், இது நாட்டின் உயிர் நாடியின் மீதும் கலாசாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். இது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். மேற்குலக நாடுகளின் அனுசரணையில், எந்தவொரு சமயத்தையும் மதிக்காத, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்படும் நபர்களே இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.

வெளிநாடுகளிலுள்ள பிக்குகளும் பெளத்தத்துக்காக பெரும் பங்காற்றி வருகிறார்கள். தாய்வானிலிருக்கும் போதகம சந்திம தேரர், பிரான்ஸிலுள்ள சந்த ரத்ன தேரர், அமெரிக்காவிலுள்ள வல்பொல பியனந்த தேரர், மலேசியாவிலுள்ள சன்னங்கரதேரர் போன்றோர் பெளத்தத்தை பாதுகாக்க பெரும் பங்காற்றி வருகிறார்கள். எமது சாசனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். தற்போதையளவில் வடக்கு கிழக்கில் இருக்கும் பெளத்த வழிபாட்டுத் தலங்கள், பெளத்த தொல்பொருள் ஆதாரங்கள் பாரியளவில் அழிக்கப்படுகின்றன. குருந்தி விகாரை பிரச்சினையை நான் எனது கண்கூடாக பார்த்துள்ளேன். நெடுங்கேணியிலுள்ள விகாரையை தரைமட்டமாக்கி, அதன் மீது வேறு சமய வழிபாடுகளை முன்னெடுக்கிறார்கள். தற்போதே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றால் அந்த மாகாணத்தை தனியாக்கினால் அல்லது தனியான அரசொன்று உருவாகினால் எந்தளவு அழிவு ஏற்படும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே நாட்டின் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக தெரிவித்து பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிளவடைய செய்யவே பயங்கரவாதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிரிப்பதற்கு எதிரான பயங்கரவாத போரில் எமது மக்களை பறிக்கொடுத்துள்ளோம். அநேகமானவர்கள் அங்கவீனமுற்றார்கள். அவ்வாறானவொரு நிலைமைக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. தமிழ் மக்களே இதனால் பெரும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகிறோம். சிறுவர்களுக்கு விடுதலை புலிகளின் சீருடைகளை அணிந்தது மாத்திரமல்லாமல், அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்திருந்தார்கள். தற்போதிருந்தே சிறுவர்களின் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக வைராக்கியத்தை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த ஒற்றுமையை பாதுகாப்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களும் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளியோம். அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் இடங்களுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம் என்றார்.

மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அது புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாசவையும் ,பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் புலிகளின் சின்னங்களுடன் நினைவுகூர்ந்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நினைவு கூர்பவர்களை கைது செய்ய பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம் – பேர்ள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.

தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்கவேண்டும்,குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த முன்னாள் போராளியொருவரின் குடும்பத்தினர், ஒரு சிறாரை போராளியை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளனர்.

கோப்பாயை சேர்ந்த அன்றாட உழைப்பாளியொருவரும் தனது 3 பிள்ளைகளை போராளிகளை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு முழுமையான உரிமை உண்டு – ஜனாதிபதி ரணில்

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.

தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வுபூராவாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடருக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகளால் தமிழர் வரலாற்று மைய கண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.