நகைச்சுவைக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்யவுள்ள இலங்கை பொலிஸார் !

நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட அவதூறான கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறைவிசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள் கூறுகிறது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக நடாஷா எதிரிசூரிய நேற்று கைது செய்யப்பட்டு ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

31 வயதான நடாஷா, கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பௌத்த பெண்கள் பாடசாலைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

திவயின அறிக்கையின்படி, அவரது அறிக்கைகளுக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்ய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெறுப்பு பேச்சு வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்று சுட்டிக்காட்டிய காவல்துறை, இந்த விஷயத்தில் நகைச்சுவை நடிகருக்கு அறிவுரை வழங்கிய நபரை அடையாளம் காண்பது குறித்தும் விசாரணை கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் கைதுகள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் போது சிரித்து பேசியவர்களை எந்த சட்டத்தின் கீழ் போலீசார் விசாரிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படக்கூடியவர்கள் தொடர்பான திவயின செய்தியை பொலிசார் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் கைது

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம்

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும், கொழும்பு 12, கெசல்வத்தை, டாம் வீதியில் வைத்து இரண்டு நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

வடக்கு மாகாண மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்களை பாதுகாக்க மாகாணத்திற்கு உரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேந்திரன்

வடக்கு மாகாணத்திற்கு உரித்தான மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யாது பாதுகாக்க மாகாணத்திற்குரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற 13திருத்தத்தின் சாதக பாதங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண மக்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றம் விகாரையின் கட்டுமானங்கள் நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையிலும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து விகாரை அமைத்து யாவருக்கும் தெரியும்.

13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக நாம் ஏற்கவில்லை சிலர் அரசியல் நீதியில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக பதின் மூன்றை ஏற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச இருப்புக்களையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக 13திருத்தம் அவசியம்.

வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை வரலாற்று இடங்கள் என்ற போர்வையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன.

அதனை தடுப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்கினாலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் இல்லாத நிலையில் மத்திய பொலிஸ் உயர் அதிகார வர்க்கங்களின் உத்தரவில் தீர்ப்புக்களை உதாசீனம் செய்கிறது.

ஆகவே அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் போதுமாவட்ட நீதிமன்றங்களின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராயும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு சிபாரிசு செய்தால் அது உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சாலியபீரிசிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாலியபீரிஸ் தனது கட்சிக்காரர் ஒருவர் தொடர்பில் தனது தொழில்சார் கடமையை செய்த விதம் குறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆர்ப்பாட்;டம் சாலியபீரிசிற்கு அவரது கட்சிக்காரருக்காக ஆஜராவதற்கான உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என நாங்கள் கருதுகின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி என்ற அடிப்படையில் அவரின் கடமைகளிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான தலையீடுகளை நிறுத்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பவானி பொன்சேகா, ஒஸ்டின் பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, ஜயம்பதி விக்ரமரத்ன, லயனல் போபகே, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, தீபிகா உடகம உள்ளடங்கலாக 83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிவிட்டது என்ற பொய்யான காரணியின் அடிப்படையில் நீதிமன்றக்கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எமது நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியிலும், நாட்டுமக்களின் உரிமையிலும், ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்படும் இடையூறாகவே அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதேவேளை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள், சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் உரிய தினத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் திட்டத்தைக் குழப்பும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது பிரயோகிக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அரசாங்கம் அதன் ‘தாக்குதல்களுக்காக’ நீதிமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கின்றது.

இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது. எந்தவொரு ஜனநாயக சூழலிலும் தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் தெரிவை மிகவும் அமைதியானதும், செயற்திறனானதுமான முறையில் வெளிப்படுத்துவதற்கு மக்கள் கொண்டிருக்கும் வாய்ப்பான தேர்தலின் ஊடாக அவர்களது குரல் ஒலிப்பதை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.

இவையனைத்தும் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின்கீழ் இலங்கையின் ஜனநாயகம் மிகமோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையே காண்பிக்கின்றது. எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மீண்டும் மிகமுக்கியமான விடயமாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடமும், தேர்தலை நடாத்துவதற்குப் பொறுப்பான அனைத்துத்தரப்புக்களிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உருவாக்கிய நியதி சட்டங்களை ஆளுநர் இரத்து செய்யவேண்டும்; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உருவாக்கிய இரண்டு நியதிச் சட்டங்களையும் மே 24ஆம் திகதிக்கு முன்பாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதேசமயம், மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று வடக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக அவரின் பிரதிநிதி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க நியதி சட்டம், சுற்றுலா அலுவலக நியதிச் சட்டம் என்ற இரு நியதிச்சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தார். வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இல்லாத நிலையில் வடக்கு ஆளுநர் இந்த நியதிச் சட்டங்களை உருவாக்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் செய்தமை சட்ட விரோதமானது என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம். பியுமான எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதி, “நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று சட்ட மா அதிபர் மூலம் வடக்கு ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நியதி சட்டங்களை நடைமுறைப்படுத்தமாட்டார் என்று எழுத்துமூலம் ஆளுநர் சட்டமா அதிபருக்கு உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்காமல் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதியரசரை கோரினார்.

ஆளுநரின் உறுதியளிப்பை ஏற்று வழக்கை கைவிட முடியாது. ஆளுநர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு நேரடியாக வெளிப்படுத்தினால் மட்டுமே அதனை ஏற்று வழக்கை கைவிடலாம் என்று வழக்காளி தரப்பில் வாதாடிய சட்டத்தரணி தெரிவித்தார். இதையடுத்து நீதியரசர், அடுத்த வழக்கு விசாரணையின்போது – மே 24ஆம் திகதிக்கு முன்பாக, வடக்கு ஆளுநர் தான் அறிவித்த இரு நியதி சட்டங்களையும் இரத்து செய்து வர்த்தமானி மூலம் அறிவித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை நீடிப்பு

பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறுத்தி வைப்பதற்கான இடைக்கால உத்தரவை மார்ச் 28 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மேலும் நீடித்தது.

தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனை கூண்டில் நிற்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில் இருந்து நீதவான் தடுக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன் மீட்கப்பட்ட விவகாரத்தில், தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1) (அ) பிரிவின் விதிகளின்படி செயற்பாட்டாளர் மஹிந்த ஜயசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.