துமிந்தவுக்கு கோத்தபாய வழங்கிய பொதுமன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

யாழ்ப்பாண சிறைச்சாலை முன் மாதிரியான சிறைச்சாலையாக உள்ளது – நீதியமைச்சர் விஜயதாஸ

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியால் தமிழ் அரசியல் கைதிகள் மன்னிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதன்சேகர் மார்ச் 29, 2023 அன்று அவசரகால (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிருபாகரன் குற்றவாளி என கண்டறியப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

லசந்தவைக் கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சஜித் கோரிக்கை

”ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”15 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம் என கடந்த தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பலர் வாக்குறுதியளித்திருந்த போதிலும் யாரும் அதனை நிறைவேற்றவில்லை.

லசந்த தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அஞ்சாதும் செயற்பட்டவர் ஆவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்ய நேரிட்டது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியவர் லசந்த விக்கிரமதுங்க. எனவே லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“லொகான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தார்” – தமிழ்க் கைதி ஒப்புதல் வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதோடு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் என்பவரே இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும்,” சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து, எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னை முழங்காலில் இருத்தியதோடு உண்மையை சொல்லுமாறு துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் ” என அவநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு – ஆட்கொலை என நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக நேற்று (2) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும் இரண்டாவது சாட்சி, ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், மேலதிக சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் பொலிசார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமாஅதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை மாணவர் படுகொலை – நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதுகுறித்து உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதையும், இழப்பீடு வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், அது மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நினைவேந்தல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பொலிஸ் பேச்சாளர்

வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்கள் சட்டத்துக்கு எதிரானதாக அமையும் பட்சத்தில் அவை தொடர்பில் பாராபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வடக்கு,கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வடக்கு,கிழகில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (26)  எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் உள்ளிட்ட உரிய பணிப்புரைகள் மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சட்டத்துக்கு எதிரான முறையில் நினைவேந்தல் செயற்பாடுகுளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே இவ்விதமான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் சட்டத்தினை மீறும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(25) வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் விசாரணை என்ற பெயரில் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் மூன்றரை மணிநேரம் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்று மாலை 04.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைப்பதற்கான உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதவான் பிறப்பித்ததையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பொலிஸ் காவலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்ய உத்தரவு

சித்தங்கேணி இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு,

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை முன்னிட்டு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.