இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.