பாராளுமன்றில் எவருக்கும் 50% வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதுவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலி சப்ரி ரஹீமிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு கோர தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரை அலி சப்ரி ரஹீமை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு வேறு வழியில்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

தங்கம் மற்றும் ஏனைய பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதற்காக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

74 மில்லியன் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 4.2 மில்லியன் மதிப்புள்ள 91 ஸ்மார்ட் போன்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Posted in Uncategorized

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.

ஐ.எம்.எவ் கடனுதவி வேலைத்திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுபடுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் கட்சிகளுக்கு நாட்டிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என சாகல ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிய மாற்றங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.

மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக நாடாளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.

கடன் வாங்கி இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி பெறப்பட்டமை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், 4 வருடங்களில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி பெறுவதாகவும், இதன் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

“கூடுதலாக, நாடு மற்ற தரப்புக்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் டொலர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறது. சிலர் நாணய நிதியத்தின் கடன் வசதியை மற்றொரு கடனாகக் கருதுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் நாட்டின் மொத்தக் கடனையும் பெற்ற தொகையைக் கொண்டு அடைக்க முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த அறிக்கைகள் அறியாமையை அல்லது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுகின்றன என்றார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் சரி செய்யப்படுகிறது. பணவீக்க விகிதத்தை 6-4 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடன் வாங்கி வருமானம் ஈட்ட வேண்டும்“ என்றார்.

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது – ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை வாங்கிய அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும். இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த பாதையை பின்பற்றினால் 2048 இல் இலங்கையை உலகில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.

நான் பிரதமரானதும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. பட்ஜெட் விவாதத்தின் போது அவர்கள் ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியபோது ஆதரிக்கவில்லை.அந்த சமயங்களில் பல்வேறு காரணங்களை கூறி ஆதரிக்க மறுத்தனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, ராஜபக்சவை மீட்பதே எனது நோக்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் கடினமான காலத்தில் இருந்து இலங்கை அன்னை மீட்கப்பட்டதை சர்வதேச சமூகம் கூட தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் விதிகளை வகுத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுகிறோம்.

இப்போதும் கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.