சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு எதிராக 117 எம்பிக்களும் ஆதரவாக 75 எம்பிக்களும் வாக்களித்தனர். இந்த பிரேரணை மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் விவாதிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தின் முடிவில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. எம்.பி.க்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட இரண்டு உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது 31 எம்.பி.க்கள் சபையில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், பிரியங்கர ஜயரத்ன, நிமல் லான்சா, வடிவேல் சுரேஸ், டபிள்யூ.டி.ஜே.சேனவிரத்ன, ஏ.எல்.எம்.அதவுல்லா மற்றும் ஏ.எச்.எம். பௌசி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பொதுஜன பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரம, அத்துரலியே ரத்தின தேரர், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வாக்களிக்கும் போது அவையில் இருக்கவில்லை. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளார். சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுவார்.

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டது, எனினும் பாராளுமன்ற அலுவல்கள் குழு அதன் பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்த முடிவு செய்தது.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு பேரவையில், ஐஜிபி தேசபந்து தென்னகோனின் நியமனத்தை உறுதிசெய்ய சபாநாயகர் ‘அரசியலமைப்புக்கு முரணாகவும் சட்ட விரோதமாகவும்’ தனது தீர்க்கமான வாக்கைப் பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.