இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.
எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
‘அட்வகாட்டா’ அமைப்பு
இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.
எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.
ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.
இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு
வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.
இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளியலாளர் ஸேர்கி லேனோ
இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.
பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்
இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.
கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.
இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.