நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்படுகிறது

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும், திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போதைய 2 மணித்தியால 20 நிமிட தினசரி மின்வெட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மின் கட்டணம் அதிகரிக்கப்படின் விசாரணை மேற்கொள்ளும்

ஜனவரியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்படும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம்  அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதை பொருளாதார நெருக்கடி காரணமாக  ஏற்கனவே பெரும் சுமைகளை சுமக்கும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்  உரிமை அரசாங்கத்திற்கோ அதன் பங்குதாரர்களிற்கோ கிடையாது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமைச்சோ அல்லது இலங்கை மின்சார சபையோ மின்சார கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்தால் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் என அதன் இயக்குநர் நிகால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

10 மணித்தியால மின்வெட்டு உண்மைக்குப் புறம்பானது

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் அறிவிப்பையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

நிலக்கரி கப்பல்கள் 14 நாட்டை வந்தடையவுள்ளன

ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது

3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுசக்தித் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை – ரணில்

மின்சார சபையின் நட்டத்தை போக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே இந்த நிலையில் இருக்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரித்தது. என்றாலும் அது போதாது.  மேலும் 152 பில்லியன் நட்டம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. 2013 இல் இருந்து மின்சார சபையின் மொத்த நட்டம் 300 பில்லியனாகும்.

இந்த தொகையை இந்த காலப்பகுதியில் தேடிக்கொள்ளவேண்டி இருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் நடுப்பகுதியில் வரட்சி ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் எமக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றுது.

சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்தால் எமக்கு 352 பில்லியன் ரூபாவரை தேவைப்படும்.  அவ்வாறு இல்லாமல் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் 295 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த தொகையை நாங்கள் எவ்வாறு தேடிக்கொள்வது?. இது தான் பிரச்சினை.

அத்துடன் அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை. பணம் அச்சிட்டால் ரூபா வீழ்ச்சியடையும். வரி அதிகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அப்போதும் பிரச்சினைதான். அப்படியானால் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும்.

இது பிரச்சினைக்குரிய விடயம் என்பதை நான் அறிவேன். மின் துண்டிப்புக்கு செல்ல முடியும். ஆனால் அடுத்து மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருப்பதால் மின் துண்டிப்பை நிறுத்தவேண்டி இருக்கின்றது. மின் கட்டணம் அதிகரிக்க யாரும் விரும்பப்போவதில்லை.

இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் சுமையும் எமக்கு தெரியும். இதனைத்தவிர எமக்கு இருக்கும் மாற்று வழி என்ன? நாங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாக்கிப்பிடித்துக்கொண்டு, தற்போது சீனாவுடன் கலந்துரையாடி முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லாம்.

நாங்கள் நட்டத்தை காட்டி வருமானத்தை காட்டாவிட்டால் வெளிநாட்டுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்யவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 2013க்கு பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவி்ல்லை. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பக்கூற வேண்டும். வேறு நாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தப்பிச்சென்றோம். இப்போது என்ன செய்வது என எங்களிடம் கேட்கின்றனர்.

அத்துடன் 2001இல் நான் பிரதமராகியதுடன் ஜப்பானுடன் இருந்த நுரைச்சோலை நிலக்கறி திட்டத்தை நிறுத்தினேன். அதற்கு நிதி பிரச்சினை ஏற்படுவதால் 6மாதத்துக்கு நிறுத்தினேன். ஆனால் எமது அரசாங்கம் தோல்வியடைந்தவுடன் மீண்டும் இந்த இடத்தில்தான் அதனை போடவேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர். அதேபோன்று 2002இல் நாங்கள் உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொண்டு, மின்சக்தி தொடர்பில் எமக்கு அறிக்கை ஒன்றை தந்தார்கள். அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு, தற்போது இருக்கும் மின்சாரம் தொடர்பான சட்டமூலத்தை கருஜயசூரிய கொண்டுவந்தார்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோலியடைந்ததுடன் அந்த சட்டமூலத்தை செயற்படுத்தவில்லை. 2007 சட்டமூலத்தை கொண்டுவருமாறு தெரிவித்தனர். அப்போது நாங்கள எந்த மின்சார உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போனது.

பின்னர் 2017, 2018,2019 காலத்தில் நாங்கள் இந்தியா, ஜப்பானுடன் கலந்துரையாடி எல்..என்.ஜி. மின் உற்பத்திய நிலையங்கள் 2 பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் முடிந்து எமது அரசாங்கம் சென்ற பின்னர், இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்யாமல், அமெரிக்காவின் நியுபோட்ரஸுக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் நியுபாேட்ரஸுக்கு விருப்பம் இல்லாமல் அதனை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கினார்கள். தற்போது ஒரே பூமியில் இந்தியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

ரஷ்யா மாத்திரமே இல்லை. உலக யுத்தம் ஒன்று ஏற்படாததுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரே இடத்தை அனைத்து நாடுகளுக்கும் கொடுத்துவிட்டு தற்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர். இறுதியில் எல்.என்.ஜியும் இல்லை எதுவும் இல்லை.

காகிதமில்லா மின்கட்டண பட்டியல், பற்றுச்சீட்டு – காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் பிரதேச பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பொது முகாமையாளர்களுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர், தனது டுவிட்டரில் இன்று (07) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கான புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தெருவிளக்குகள் பொருத்துதல், தெருவிளக்குகளை இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சபையால் செய்ய முடியாத வெளிச் சேவைகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள் – சம்பிக்க

இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 ஆக  வகைப்படுத்தி நிறுவனமயமாக்க இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையின்முறையற்ற செயற்பாடுகளினாலும்,மின்சார சபை சங்கங்களின் தொழிற்சங்க போராட்டங்களினாலும் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என சமூகத்தின்மத்தியில் காணப்படும் நிலைப்பாடு உண்மையானதே, மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள்.

இலங்கை மின்சார சபையை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் 4 நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 நிறுவனங்களாக வகைப்படுத்த இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் சேவை கட்டமைப்பு 6ஆக வகைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு இலங்கை மின்சார சபையை முழுமையாக் கலைப்பதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின்மின்னுற்பத்தி பொறுப்பபை லக்ஷபான மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர்மின் வளாகத்திற்கும் சமனலவாவி மின்நிலையத்திற்கும் புத்தளம்மின்நிலையத்திற்கும் களனி திஸ்ஸ. சபுகஸ்கந்த ஆகிய மின் நிலையங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உரிமத்தை திறைசேரிக்கு தற்காலிகமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தியை நிறுவனமயமாக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். லக்ஷபான நீர் மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர் மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நீர்மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் மயப்படுத்தினால் மின்னுற்பத்திக்கு மாத்திமல்ல,குடிநீர் விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு குழுவினர்சமர்ப்பித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில்மக்களின் அபிப்ராயம் கோரப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிடில் 6-8 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு – கஞ்சன விஜேசேகர

நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர்த்து தற்போதைய நிலையில் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார்.

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும்,இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் நாட்டு மக்களை தவறான வழிநடத்தியுள்ளனர்.

கடந்த காலங்களின் எதிர்கொண்ட நட்டத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் எவ்வித பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை.

மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்யல்,ஒரு வருடத்தில் இருமுறை மின் கட்டணத்தை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யும் யோசனைகள் மாத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான மின்னுற்பத்திக்கான மொத்த செலவை இலங்கை மின்சார சபை மதீப்பீடு செய்து அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.

நீர்மின் மற்றும் உராய்வு எண்ணெய் ஊடாக மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு மின்னலகு உற்பத்திக்கு மாத்திரம் 56.6 ரூபா செலவாகும் நிலையில் எதிர்வரும் ஆண்டு இந்த தொகை பன்மடங்கு அதிகரிக்க கூடும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.மின்சார உற்பத்திக்கு மாதம் 800 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் 500 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியது.ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டணத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு திருத்தம் செய்திருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது.

ஒரு மின்னலகு உற்பத்திக்கு 56.6 ரூபா செலவாகும் நிலையில் பொது மக்களிடமிருந்து தற்போது ஒரு மின் அலகுக்கு 29.14 ரூபா அறவிடப்படுகிறது.இலங்கை மின்சார சபை மாதாந்தம் 423 பில்லியன் ரூபாவை வருமானத்தை காட்டிலும் மேலதிகமாக செலவிடுகிறது.இந்த தொகையை வழங்க முடியாது என திறைச்சேரி குறிப்பிட்டுள்ளது.

நடைமுறைக்கு பொருத்தமான முறையில் மின்சார கட்டணத்தை திருத்தம் செய்யாவிடின் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை செய்ய நேரிடும்.மின்கட்டணத்தை தவிர்த்து பிற திட்டங்கள் ஏதும் கிடையாது.தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மாத்திரம் 70 பில்லியன் ரூபாவும்,மின் விநியோகஸ்தர்களுக்கு 40 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும். மின்விநியோகஸ்தர்களுக்கான கட்டணத்தை வழங்காவிடின் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை யோசனை சட்டபூர்வமானது இல்லை என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றது. சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமையவே மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒரு அலகு மின்சாரத்துக்கு 59 ரூபாய் செல்வு

அடுத்த வருடம் நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவிட வேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஓர் அலகுக்கு 56.90 ரூபாய் என்ற நிலையான கட்டணம் அறவிடப்பட வேண்டும். அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது தமது யோசனை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி நாட்டின்ல 67 இலட்சத்து 9 ஆயிரத்து 574 மின்சார வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், ஓர் அலகிற்கு தற்போதைய சராசரி கட்டணம் 29.14 ரூபாய் அறவிடப்படுகிறது.

இதனால் 423.5 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 0-30 அலகு தொகுதியில் 1,460,828 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 8 ரூபாவை செலுத்துகின்றனர்.

30-60 அலகு தொகுதியில் 1,683,172 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 10 ரூபா செலுத்த வேண்டும். 60-90 அலகு தொகுதியில் 1,702,515 நுகர்வோர் உள்ளனர். ஓர் அலகு்ககாக 16 ரூபாவை அவர்கள் செலுத்த வேண்டும்.

90-180 அலகு தொகுதியில் 1,559,131 நுகர்வோர் உள்ளனர் ஓர் அலகுக்காக 50 ரூபாவை செலுத்த வேண்டும். 180 மேற்பட்ட அலகு தொகுதியில் உள்ள 303,928 நுகர்வோர் ஓர் அலகுக்காக 75 ரூபாவை செலுத்துகின்றனர்.எனவே இதில் சமநிலை இல்லாத நிலைமை இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் மின்சாரத்தின் ஓர் அலகுக்கான கட்டணத்தை 56 ரூபாய் 90 சதமாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கீழ் அடுக்கு (90 அலகுக்கு கீழ்) மின்சார நுகர்வோருக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படும். இதில் ஒரு பகுதியை, அதிகளவில் மின்சாரத்தை நுகர்பவர்கள் செலுத்தும் மேலதிக தொகையை கொண்டும், மீதமானவை திறைசேரியினாலும் ஈடுசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Posted in Uncategorized