இலங்கை – இந்தியா கடல்வழி மின் விநியோக ஒப்பந்தம் தயார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை கொள்கை ரீதியில் எட்டப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மின் கேபிளை அமைக்க இந்திய – இலங்கை அதிகாரிகள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள கடற்பரப்பில் இந்திய – இலங்கை எல்லைகளை பிரிக்கும் மணல்பரப்பின் ஊடாக இந்த மின்சார கேபிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர,

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு நிலத்தடி வழியாக எரிபொருள் குழாய் அமைக்கவும் இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

மின்சார கேபிள் அமைக்க சுமார் 80 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தற்போதைய முதற்கட்ட கணிப்பில் தெரியவந்துள்ளது.

மின்சாரதுறை மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

வலு சக்தி துறை மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்புக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் அதன் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (08) அமைச்சில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஆலோசகர் அரிந்தம் கோஷ் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 8 வாரங்களுக்குள் மறுசீரமைப்புக்களுக்கான வரிபடத்தை தயாரித்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் எரிபொருள் விநியோகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு சீனாவினால் நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

சம்பூரில் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனத்துக்கு சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீட்டர் தூரம் கொண்ட 220 கிலோவாட் மின்மாற்றுவழியை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 85 மெகாவாட்டுன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரையில் 220 கிலோவாட் இயலளவுடன் கூடிய 76 கிலோமீட்டர் தூரம் கொண்ட மின்மாற்றுவழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 2024 முதல் 2025 வரையிலான இரு ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மீள்புதுப்பிக்கத்தக்க துறையின் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு ஏனைய பகுதிகளிலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு சார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் என்பன இந்த இணக்கப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் இந்திய முதலீடுகள் குறித்து அவதானம்

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா – இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையிலான சிரேஸ்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதிநிதிகள் குழுவிற்கும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மேற்கூறப்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது உயிர்ம எரிபொருள், புதுப்பிக்கத்தக்க சக்தி, பசுமை ஹைட்ரோஜன் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பினை விஸ்தரிப்பதற்கான சாத்தியங்களுக்கு அப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் இயற்கை எரிவாயு மற்றும் சக்தி மையத்தினை அபிவிருத்தி செய்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , இந்திய பெற்றோலிய கூட்டுத்தானம் , இந்திய பொறியியலாளர்கள் நிறுவனம் , ஹிந்துஸ்தான் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , பெற்றோனெட் எல்.என்.ஜி. லிமிடட் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் எரிபொருள் விலைகள் குறையும்

அடுத்த மாதம் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்பின், டிசம்பரில் மின்கட்டணமும் குறைக்கப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். நாங்கள் அந்த சலுகைகளை வழங்குகிறோம்.

சாலைகளில் போராட்டம் நடத்தி மின்சாரத்தை துண்டிக்கும்போது முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வர மாட்டார்கள். சில அரசியல் கட்சிகள் அதைச் செய்கின்றன.

அரசியல் கட்சிகள் வழிநடத்தும் தொழிற்சங்கங்கள் உள்ளன. சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தோன்றியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பணம் வரும்போது, ​​அவர்களின் முழக்கங்களில் ஒன்று தொலைந்து போகிறது. எரிபொருள் விலை குறையும் போது மற்றொரு கோஷம் இழக்கப்படுகிறது. பொருட்களின் விலை குறையும் போது மற்றொரு முழக்கம் மறைந்து விடுகிறது. எனவே, இவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்“ என்றார்.

காற்றாலை திட்டத்தினை 160MW ஆல் அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

அத்தோடு அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

இலங்கையில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

மின்சாரசபையை விற்பனை செய்ய முயன்றால் தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சாக்குப்போக்கில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கவோ அல்லது விற்பனை செய்யவோ நடவடிக்கை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு பல நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து பல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை இந்த செயல்முறைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.

இதற்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இறுதிச் சட்டத்திற்கு முன்னர் அமுல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

டிசம்பருக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சன

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக காஞ்சன விஜேசேகர கூறினார்.

மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகி உள்ளதாகவும் ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கட்டணம் வசூலிப்பதால், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க முடிந்தது என்றும் மின் உற்பத்தி திட்டத்தை செயற்படுத்தினால், ​​டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனகாஞ்சன விஜேசேகர கூறினார்.