மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் இந்திய முதலீடுகள் குறித்து அவதானம்

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா – இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையிலான சிரேஸ்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதிநிதிகள் குழுவிற்கும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மேற்கூறப்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது உயிர்ம எரிபொருள், புதுப்பிக்கத்தக்க சக்தி, பசுமை ஹைட்ரோஜன் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பினை விஸ்தரிப்பதற்கான சாத்தியங்களுக்கு அப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் இயற்கை எரிவாயு மற்றும் சக்தி மையத்தினை அபிவிருத்தி செய்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , இந்திய பெற்றோலிய கூட்டுத்தானம் , இந்திய பொறியியலாளர்கள் நிறுவனம் , ஹிந்துஸ்தான் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , பெற்றோனெட் எல்.என்.ஜி. லிமிடட் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.