இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும் – டலஸ் அழகபெரும

எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும், நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.

சமூக கட்டமைப்பில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு  இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின்  வழக்குகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துமாறும்  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்களுக்கு அதிக காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பலர் சாதனைகளை புரிந்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காக கொண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரரன்  அண்மையில் அரச இலக்கிய விருதில் தமிழ் சிறுகதைக்கான விருதை பெற்றுள்ளார். இவரை போன்று பலர்  இவ்வாறு சிறையில் உள்ளார்கள்.

60 அல்லது 70 ஆண்டுகளாக சிறையில்  6 பேர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தேவதாசன்  என்ற சிறை கைதி கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பலர் நோய் வாய்ப்பட்ட நிலையில் சிறை  கைதிகளாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் கல்வி முறைமையை சிறைச்சாலைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பாடசாலைக்கு செல்லாத 2494 கைதிகளும்,ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை தோற்றிய 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 6,790 கைதிகளும் உள்ளார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 198 பட்டதாரிகள் சிறைகைதிகளாக உள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள்  தொடர்பில் நீதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த  வேண்டும்.அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள்  துரிதப்படுத்தப்பட்டு, உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும். எதிர்கால அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,

ஆனால் எப்பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல ஆண்டுகால பழமை கொண்ட ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பு இதுவரை ஒருமுறை தான் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 235 வருடகால அரசியல் பின்னணியை கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு இதுவரை 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,ஆனால் 74 ஆண்டுகால அரசியல் பின்னணியை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பு இதுவரை 21 முறை சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பினை திருத்தம் செய்துள்ளன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இனம், மத பேதமற்ற  வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – பேராயர்

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, அரசியலமைப்புச் சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 02 வார கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பினால் எம்மை மெளனிக்க செய்ய முயல்கின்றனர் – பேராயர்

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து விட வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு நீகுவதற்கான ஏற்பாது புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராயர் , இதனால் தாம் முழுமையான மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மை ஆட்சி செய்கின்ற, எமது வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஏன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காண்பிக்காமலுள்ளனர்? இதற்கான காரணம் என்பது தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தாம் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த வாக்குகளை வழங்கிய மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

தற்போது தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட தேர்தல் முறைமையில் தொகுதி முறைமை காணப்பட்டது. இந்த முறைமையின் கீழ் நாம் தெரிவு செய்யும் எந்தவொரு உறுப்பினரானாலும் , அவர் அவரது தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துவார். ஆனால் தற்போது அவ்வாறொன்று இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காக முழு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு வாக்குகளைப் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்பதால் , அவர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் வாக்களித்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும் போது அவர்களை துரத்தியடிப்பார்கள். 1978 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவேயாகும்.

எமது நாட்டின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர். பல வருடங்களாக எமது நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டில் வீடுகள் இன்றி எத்தனை குடும்பங்கள் உள்ளன? கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சாகவும் உள்ளார். டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மூன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா நகர அபிவிருத்தி அமைச்சு என்ற ஒன்று காணப்படுகிறது? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து , அவர்கள் முன் தலை குனிந்து இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமை என்ன? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து விட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மாறாக இவர்களுக்கு வாக்களித்து விட்டு , பின்னர் என்னிடம் வந்து வீடமைத்து தருமாறு கோர வேண்டாம். ஜனாதிபதியினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழு அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் யாரிடமும் சென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் பெறவில்லை. மாறாக அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடி பிரதியொன்றை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அதன் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப் பெற்றது. அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் அது நாட்டுக்கு சாபக்கேடாகும். ஒழுக்கமற்றவொரு அரசியமைப்பினையே தயாரித்துள்ளனர்.

எவரேனும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரச நிறுவனத்திற்கு எதிராகவோ , ஐக்கிய நாடுகள் சபை , வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தலைவர்களிடம் குறைகளைக் கூறினால், குறித்த நபரின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். கல்வி கற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் இதனையே செய்துள்ளனர். எம்மை முழுமையாக மௌனிக்கச் செய்துள்ளனர். இதுவே எமது நாட்டுக்கு இடம்பெற்றுள்ள நிலைமையாகும் என்றார்.