இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வருகை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

மேலும் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிபர் ரணில் அமைச்சர்களான, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியா – இலங்கை இடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை – உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த சில மாதங்களில் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்பட்ட சென்னை – யாழ்ப்பாண விமான சேவை, வரும் ஜூலை 16 முதல் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு என்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல் எல்லைகளைத் தாண்டிய பொதுவான பாரம்பரியத்தை உருவாக்கும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா திட்டம்

இலங்கையின் நிதிச் சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச் செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்ட மிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்தாரென இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை, அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு, 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி, 3 பில்லியன் டொலர்களை சீனாவுக்கும், 2.4 பில்லியன் டொலர்களை பரிஸ் கிளப்புக்கும், 1.6 பில்லியன் டொலர்களை இந்தியாவுக்கும் செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த மறுசீரமைப்பு நிதிவசதி கிடைக்கப்பெற்ற பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பாக 3 முதல் 4 ஆண்டுகளில், இலங்கையிடம் இருந்து பெறவேண்டிய கடனை, 10 முதல் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும்.

பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார். இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி- யாழ்ப்பாணம் புதிய கப்பல் மார்க்கத்துக்கு புதுவை முதல்வரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை!

யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை சிறப்பான விடயம் எங்களின் அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து ஆராய்ந்தோம்,எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை எங்கள் அயல்நாடுகளிற்கு முதலிடம் என்ற கொள்கையில் முக்கியமான இடத்தில் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆதரவினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது – மிலிந்த மொரகொட

இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது , இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் , மேலும் பல நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.

உண்மையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஆதரவளித்திருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றிருக்க முடியாது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை கடந்த ஆண்டு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக முதன் முறையாக கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்தமை , மின்சாரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமை , மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து அவர் தெரிவித்துள்ள போதிலும் , அது தொடர்பில் விரிவான விபரங்களை வெளியிடவில்லை

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது – நாமல்ராஜபக்ச

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் அரசதொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியிலான உறவுகளை மீள ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசியல் கட்சிகள் அரசாங்கங்கள் மத்தியிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் மாத்திரமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலான உறவுகளையும் வலுப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சீனாவும் நீண்டகால நண்பர்கள் இதன்காரணமாக இரு நாடுகளிற்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன மிகவும் நெருக்கடியான காலங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவாக விளங்கியுள்ளது அதேபோன்று சீனா எப்போதும் ஒரு சீன கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளார்,என சுட்டிக்காட்டியுள்ள நாமல்ராஜபக்ச வருட இறுதியில் ஜனாதிபதியும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் ஏனைய மூலோபாய திட்டங்கள் மூலம் இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வல்லரசுகளின் போட்டியில் பல நாடுகள் பக்கம் சாய்வதை தவிர்க்கும் போக்கு அதிகரித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல்ராஜபக்ச நாங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற புவியியல் வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தக்கூடாது நாடுகளிற்கு இடையில் சர்வதேச அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இந்த விடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்பொறி குறித்த கேள்விக்கு நாமல் ராஜபக்ச இது புவிசார்அரசியல் தொடர்பானது துரதிஸ்டவசமாக இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மறுசீரமைப்பது குறித்து கருத்துதெரிவித்துவரும் அனேகமான உட்கட்டமைப்புகள் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை இது பொறி என்றால் முன்வந்து முதலீடு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு அளப்பரியது – விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.