ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்தமை தொடர்பில் சீனா கடும் அதிருப்தி

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடைவிதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஆராய்;ச்சிக்கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு  இலங்கை ஒருவருடகால தடையை விதித்துள்ளது.

சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது.

குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்புகரிசனையை இந்;தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன .

எனினும் சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்,இன்னுமொரு நாட்டின் அழுத்தத்தினால் இலங்கை இவ்வாறான முடிவை எடுத்தமை குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்தியா – இலங்கை நிர்வாக, அரச அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்த உத்தியோகபூர்வ பேச்சு

இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் இலங்கை பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் தலைமையில் நிர்வாக மற்றும் அரச அதிகாரிகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இரு தரப்பு பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை இன்று (15) புது டில்லியில் நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவில் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக (SLIDA) பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவே ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

இதேவேளை, இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் மூத்த அதிகாரிகள், என்.பி.எஸ். ராஜ்புத், புனித் யாதவ் மற்றும் ஜெயா துபே ஆகியோரும் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மூலம் நடத்தும் நோக்குடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் NCGG இடையில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிமுறைகள் குறித்து இச்சந்திப்புகளின்போது இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் (SLIDA) பணிப்பாளர், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை அதிகாரிகளுக்கான திறன் விருத்தி செயற்றிட்டம் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, பல்வேறு உயர்மட்டங்களில் 1000 அதிகாரிகளுக்கு கலப்பு முறையில் பயிற்சிகளை நடாத்துவதற்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தார்.

இதேவேளை இந்த பேச்சுகளில் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் நிர்வாக மறுசீரமைப்பில் தமது முக்கிய வகிபாகங்கள் மற்றும் பொது நிர்வாகத்துக்கான பிரதமர் விருது திட்டத்தில் தகுதி அடிப்படையில் அங்கீகரித்தல், CPGRAMSஇல் AI/MLஐப் பயன்படுத்துவதன் மூலம் பொதுக் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் பொது குறைகளைக் கையாள்தல் மற்றும் ஒன்றிணைந்த சேவை தளங்கள், அவசியமான இ-சேவை மற்றும் இலத்திரனியல் கட்டமைப்பினதும் அவற்றின் பெறுபேறுகளினதும் வலுவாக்கல் போன்ற முன்னெடுப்புகள் மூலமாக சேவை வழங்கலை மேம்படுத்தல் குறித்த தகவல்களை வழங்கியிருந்தனர்.

டிஜிட்டல் கட்டண முறை (UPI) மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இது எங்களிற்கு மிகவும் முக்கியமான தருணம். இந்திய பிரதமர் மோடி அவர்களே இது உங்களிற்கு இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இராமர் கோயிலை திறந்துவைத்தமைக்காக நான் உங்களை பாராட்டவேண்டும்.

எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தொடர்புகள் பிணைப்புகள் உள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் இருநாடுகளிற்கும் இடையில் பணப்பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. அதிஸ்டவசமாக அவ்வேளை மத்திய வங்கி என்ற ஒன்று இருக்கவில்லை.

இலங்கையின் உலர்வலயங்களின் கிராமங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களிற்கு முற்பட்ட – தென் இந்திய காலத்து நாணயங்கள் காணப்பட்டமை இலங்கை தென் இந்திய ஒத்துழைப்புகள் மிகவும் வலுவாக காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.

ஆகவே, நாங்கள் இன்று என்ன செய்கின்றோம் என்றால் அவற்றை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துகின்றோம்.

இலங்கைக்கு அதிகளவு இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையேற்படும்போது எங்களின் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்படும்.

“தமது இந்திய விஜயத்தின் “தொலைநோக்கு அறிக்கை”யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதிசெய்யும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்,

இந்தியாவும் மொறிசீயசும் வலுவான பொருளாதார கலாச்சார தொடர்புகளை கொண்டுள்ளன. இன்று நாங்கள் இந்த உறவுகளிற்கு மேலுமொரு புதிய பரிமாணத்தை வழங்குகின்றோம் என்றார்.

இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும்முறையினால் இலங்கையிலும் மொறீசியசிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நன்மையடைவார்கள்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை காரணமாக இந்த இரு நாடுகளிலும் துரிதமாகவும் இலகுவாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை உலகின் தென்பகுதி நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றது. எங்கள் உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த பத்து வருடங்களில் சவாலான தருணங்களில் இந்தியா தனது அயல்நாடுகளில் எவ்வளவு தூரம் ஆதரவாக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய பரிவர்த்தனை முறை

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் (Unified Interface Payments) என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணையத்தின் ஊடாக இணைவார்கள் என்று தாம் நினைப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த தொழில்நுட்ப அறிமுகம் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டிருந்தார்.

அந்தப் பதிவில் “கம்பாலா நகரில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை ‘சாகர்’ கொள்கை பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு செய்ய உடன்பாடு

உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை 2024 மார்ச்சில் நிறைவு செய்ய இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (எட்கா) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அதில் ஏற்புடைய பல துறைகள் தொடர்பாக இருதரப்பு செயற்பாட்டுக் குழு உடன்பாடுகளை எட்டியுள்ளது.

குறித்த உத்தேச ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்றுக் கலந்துரையாடலை 2024.01.08 தொடக்கம் 2024.01.10 ஆம் திகதி வரை இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதமாகும் போது தொழிநுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை நிறைவு செய்வதற்கும் இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர். 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல, கருணாரத்ன, நீதிபதி தம்மிக கணேபொல ஆகியோர் இன்று (14) விலகியுள்ளனர்

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால், உரிய பீடத்தை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஜனாதிபதிக்கு உரிய மனுவை அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை முன்வைப்பு

சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னர் போல இலங்கையை சேர்ந்த சகா இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது.

எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized