உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ள நிலையில், பெரும்பாலும் ஒருவருடகாலத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் இன்றும், நாளையும் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வாய்மொழி மூலம் விளக்கமளித்தார்.
அதுமாத்திரமன்றி இதுகுறித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எழுத்துமூல அறிக்கையும் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நேர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், ‘இருதரப்பினரும் மீறல்களில் ஈடுபட்ட அதேவேளை, இது முன்நோக்கிப் பயணிப்பதற்கான தருணம்’ என்ற கோணத்தில் நிலைமாறுகாலநீதியை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளகப்பொறிமுறைகளை அரசாங்கம் ஸ்தாபித்தது.
இந்தப் பொறிமுறைகள் ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்தின.
அதன் ஓரங்கமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், மரணங்களைப் பதிவுசெய்தல், காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டம், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்பன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டன.
மேலும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும். அதுமாத்திரமன்றி பெரும்பாலும் ஒருவருடத்திற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
அடுத்ததாக நினைவுகூர்தல் என்பது நல்லிணக்க செயன்முறையின் இன்றியமையாததோர் அங்கமாகும். அதற்கான வாய்ப்பை மறுப்பதென்பது இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்குமே வழிவகுக்கும்.
அதன்படி இராணுவத்தினரின் குடும்பங்களைப்போன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்றும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்துள்ளோம். அதற்கமைய இப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் ஆணைக்குழுவின் வகிபாகம், மரணதண்டனைக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பெண்கள்மீதான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதில் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.