வெளிப்படைத்தன்மையான ஆட்சிக்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரை) நிறைவுசெய்தார்.

அவர் தமது இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுபீட்சத்துக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில், இளம் தலைவர்கள், தொழில்முனைவோர், பொருளடக்க படைப்பாளிகள் (content creators), சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டார்.

இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பொன்றின் போது, துணை இராஜாங்க செயலாளர் அலனும் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பங்காண்மை தொடர்பில் கலந்துரையாடியதுடன், துடிப்பான தகவல் பரப்பொன்றுக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையலான பிணைப்பையும் கோடிட்டுக் காட்டினர்.

அத்துடன், அனைவரையும் உள்வாங்கிய ஆட்சிமுறைமைக்கான பிராந்திய மாதிரியொன்றாக உருவெடுப்பதற்கான பாதையொன்றை வகுப்பதற்கான இலங்கைக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

ஜனநாயக சமூகங்களில் ஊடகங்களின் இன்றியமையாத வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்தி கொழும்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்டோர் துணை இராஜாங்க செயலாளர் அலனின் உரையை செவிமடுத்தனர்.

பல தலைமுறைகளாக அரசாங்கங்களும் ஊடகங்களும் சிக்கலானதொரு, சில சமயங்களில் எதிர்வாதங்களுடன் கூடிய உறவை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. இந்த செயற்பாடு எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமானது கிடையாது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், இரு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்துமான ஜனாதிபதிகள் ஊடகங்களுடனான முரண்பாட்டின் அவரவரது பங்கை அனுபவித்துள்ளனர். ஜனநாயக சமூகங்களின் அடையாளமொன்றான இந்த பதற்றமானது வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் பயனுறுதிமிக்க நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியமான வகிபாகமொன்றை வகிக்கின்றது என்று துணை இராஜாங்க செயலாளர் அலன் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஐடியாஹெல் ஸ்டூடியோவில் (IdeaHell studio) அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் நடைபெற்ற கிரியேட்டர் எக்ஸ் (Creator X) செயலமர்வின் போது, துணை இராஜாங்க செயலாளர் டிஜிட்டல் டர்ட்டல்ஸின் (Digital Turtles) படைப்பாளர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், கருத்துச் சுதந்திரம் தான் எந்தவொரு ஜனாநாயகத்தினதும் முக்கிய அடிப்படை அம்சமாகும். இன்றைய தினத்தின் ஒன்றுகூடல்கள் போன்றவை அதன் நீடித்த விழுமியத்திற்கான சான்றொன்றாகும்.

பல்வேறு மொழி மற்றும் கலாசார பின்னணியில் இருந்தான படைப்பாளிகளை முதன்முறையாக ஒன்றுசேர்த்திருப்பது இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் மற்றும் வலுப்படுத்தும் விவரணங்களை செதுக்குவதில் உங்களது பணி முக்கியமானதாகும். பொருளடக்க படைப்பாளிகள் என்ற வகையில், நீங்கள் ஜனநாயக சமூகங்களை வடிவமைக்கும் உரையாடலை கட்டமைக்கின்றீர்கள் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

கங்காராமய விகாரை தொடக்கம் புனித அந்தோனியார் தேவாலயம், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் மற்றும் சம்மாங்கோடு பள்ளிவாசல் வரை என கொழும்பிலுள்ள பல்வேறு மத சமூங்கள் தொடர்பான கற்றல் பயணமொன்றை மேற்கொண்டு துணை இராஜாங்க செயலாளர் இலங்கையின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மை பற்றி அறிந்துக் கொள்வதில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வேகா இன்னோவேஷன்ஸ் (VEGA Innovations) மின்சார முச்சக்கரவண்டியில் கொழும்பின் வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் நிலையான போக்குவரத்தில் புதுமையான முன்னேற்றங்களை அவர் கண்டார். அமெரிக்கா வேகா மற்றும் முக்கியமான தனியார்துறை நிறுவனங்களுடன் பங்காண்மையில் ஈடுபட்டு இலங்கையின் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புத்தாக்கத்தையும் வளர்ச்சி தூண்டலையும் அதிகரிப்பதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றத்தினருடனும் துணை இராஜாங்க செயலாளர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினரில் முதலீடு செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடானது செழிப்பான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இலங்கையை வடிவமைப்பதில் இளையோரின் முக்கியமான வகிபாகத்தை அங்கீகரிப்பதில் இருந்து உருவாகிறது என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள அமெரிக்க தூதரகத்தின் வருடாந்த இளைஞர் தலைமைத்துவ மாநாடானது, புத்தாக்கத்தை தூண்டும் மற்றும் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும் உரையாடல்களை போசிக்கும் மற்றும் திறன்களை வளர்க்கும் நிமித்தம் இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் நிலவும் காலநிலை மாற்றம் பேன்ற அழுத்தமான விவகாரங்களின் பின்னணியில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் அயல் நாடுகளில் இருந்தான இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு பிராந்திய முன்மாதிரியாக செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொது இராஜதந்திரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன், அமெரிக்க மக்களுக்கும் மற்றும் ஏனைய நாடுகளின் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். ஊடகங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் வெளிநாட்டு அவையோர் / பார்வையாளர்களுடனான இராஜாங்க திணைக்களத்தின் ஈடுபாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அவர் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சி கடும் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து எதிர்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த சட்டமூலத்தினால் ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா உத்தேச சட்டமூலம் குறித்து அவநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம் குறித்து அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டமூலத்தினால் நிகழ்நிலை மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளமை குறித்து நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ள ஹர்சடிசில்வா சமூக ஊடகங்களை ஒடுக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறிப்பிட்ட குழுவொன்றிற்கு தொலைக்காட்சி உரிமங்களை வழங்குவதற்கு உதவலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமும் நடைமுறைக்குவந்தால் இலங்கை ஊடக உலகம் கறுப்பு உலகமாக மாறலாம் என ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

விரைவில் இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் – அமைச்சர் சாந்த பண்டார

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று வருமானம் மற்றும் செலவுகளை முகாமைத்துவம் செய்வதில் உள்ள பிரச்சினையாகும். அமைச்சின் கீழுள்ள 16 நிறுவனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அவைகளில் பெரும்பாலானவை திறைசேரியையே நம்பியிருக்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் சுயாதீனமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறிப்பாக தேசிய ரூபவாஹினி மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக நிர்வாகத்துடன் கலந்துரையாடி சில முக்கிய முடிவுகளை எடுத்தோம். இதன் மூலம் சாதகமான அணுகுமுறைகளைப் பெற முடிந்தது. சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லேக்ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் நிறுவனம்)என்பன பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்த ஆண்டுக்குள் அந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.

மேலும், 2022ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானம் 9,268 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். ஆனால் 2023 ஆம் ஆண்டு 13,616 மில்லியன் ரூபா வரை வருமானத்தைப் பெற முடிந்தது.

பொதுமக்களுக்கு எந்தச் சுமையையும் ஏற்படுத்தாமல்,சேவைகளை அதிகரித்தும், நிர்வாகத் தரப்பில் உள்ள குறைபாடுகளைக் குறைத்தும், எம்மால் அதை முறைமைப்படுத்த முடிந்தது. தபால் துறையின் 2021 ஆம் ஆண்டில் 7,173 மில்லியன் நட்டம் 2022 இல் 6,832 மில்லியனாக குறைந்தது.

ஆனால் 2023 இல் நட்டத்தை 3,222 மில்லியனாக மேலும் குறைக்க முடிந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள், திறைசேரியை நம்பி இல்லாத இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்ற முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன், தனியார் மற்றும் அரச கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் பொருட்கள் பரிமாற்றத்தை மிக விரைவாக செய்ய முடியும். இந்த வருடம் மேல் மாகாணத்தில் 200 முச்சக்கர வண்டிகள் மற்றும் 50 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பொருட்களை பரிமாற்றிக்கொள்வதற்கான கூரியர் சேவையை ஆரம்பிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், 100 தபால் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் இலங்கை வங்கிக் கிளையினால் மேற்கொள்ளப்படும் அடிப்படை வங்கிச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்ட மூலம் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதி சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சியுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

தேசிய ஊடகக் கொள்கையொன்றை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடக செயற்பாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் – கனடா கவலை

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினால் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது – கர்தினால்

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை, உண்மையை கண்டறியும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை நடாத்திச்செல்லும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிக்னீஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கொழும்பு பேராயர் இதனை கூறினார்.

சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போர்வையில் மக்கள் கருத்து வெளியிடுதல், உண்மையை கண்டறியும் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது அரசியல், மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை மீள சிந்திக்க வேண்டும் – சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து இலங்கை மீளசிந்திக்கவேண்டும் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.’

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் காரணமாக அரசாங்கம் இந்த சட்டமூலம் குறித்து மீள சிந்திக்கவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓக்டோபர் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இணையவெளியில் கருத்துசுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தை பாதிக்ககின்றது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன பிழையான அறிக்கைகளை வரைவிலக்கணப்படுத்தி ஒழுங்குபடுத்தி சட்டநடவடிக்கையை எடுப்பதற்கான அதிகாரம் புதிய ஆணைக்குழுவொன்றிற்கு வழங்கப்படவுள்ளது என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் இலங்கை சுதந்திர ஊடகஇயக்கம் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் உடனடியாக இது குறித்து முழுமையான மறுஆய்வினை மேற்கொள்ளவேண்டும் எனவும்வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.