விரைவில் இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் – அமைச்சர் சாந்த பண்டார

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று வருமானம் மற்றும் செலவுகளை முகாமைத்துவம் செய்வதில் உள்ள பிரச்சினையாகும். அமைச்சின் கீழுள்ள 16 நிறுவனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அவைகளில் பெரும்பாலானவை திறைசேரியையே நம்பியிருக்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் சுயாதீனமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறிப்பாக தேசிய ரூபவாஹினி மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக நிர்வாகத்துடன் கலந்துரையாடி சில முக்கிய முடிவுகளை எடுத்தோம். இதன் மூலம் சாதகமான அணுகுமுறைகளைப் பெற முடிந்தது. சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லேக்ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் நிறுவனம்)என்பன பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்த ஆண்டுக்குள் அந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று நம்புகிறோம்.

மேலும், 2022ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானம் 9,268 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். ஆனால் 2023 ஆம் ஆண்டு 13,616 மில்லியன் ரூபா வரை வருமானத்தைப் பெற முடிந்தது.

பொதுமக்களுக்கு எந்தச் சுமையையும் ஏற்படுத்தாமல்,சேவைகளை அதிகரித்தும், நிர்வாகத் தரப்பில் உள்ள குறைபாடுகளைக் குறைத்தும், எம்மால் அதை முறைமைப்படுத்த முடிந்தது. தபால் துறையின் 2021 ஆம் ஆண்டில் 7,173 மில்லியன் நட்டம் 2022 இல் 6,832 மில்லியனாக குறைந்தது.

ஆனால் 2023 இல் நட்டத்தை 3,222 மில்லியனாக மேலும் குறைக்க முடிந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள், திறைசேரியை நம்பி இல்லாத இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்ற முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன், தனியார் மற்றும் அரச கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் பொருட்கள் பரிமாற்றத்தை மிக விரைவாக செய்ய முடியும். இந்த வருடம் மேல் மாகாணத்தில் 200 முச்சக்கர வண்டிகள் மற்றும் 50 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பொருட்களை பரிமாற்றிக்கொள்வதற்கான கூரியர் சேவையை ஆரம்பிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், 100 தபால் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் இலங்கை வங்கிக் கிளையினால் மேற்கொள்ளப்படும் அடிப்படை வங்கிச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்ட மூலம் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதி சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சியுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

தேசிய ஊடகக் கொள்கையொன்றை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடக செயற்பாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும்.