ஜனவரியில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம்

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஊழலுக்கு எதிரான சட்டவரைபை நாம் தற்போது தயார் செய்துள்ளோம்.

ஜனவரி மாதமளவில் நாம் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக, புதிதாக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவொன்றை இதன் ஊடாக ஸ்தாபிக்கவுள்ளோம்.

அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற் சென்று செயற்படும் அதிகாரத்தை குறித்த சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக, 1975 கொண்டுவரப்பட்ட மிகவும் பழைய சட்டத்திருத்தமே தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

இதனை இல்லாது செய்து, சொத்து விபரங்களை ஒன்-லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு இணங்க சரத்தை உள்ளடக்கவுள்ளோம்.

மேலும் ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாணசபை முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துவிபரங்கள் பழைய சட்டத்திற்கு இணங்க வெளியிடப்படுவதில்லை.

ஆனால், புதிய சட்டத்தில் இவர்களின் சொத்துவிபரங்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரையான அனைவருக்கும் இது பொதுவான சட்டமாக அமையும்.

இது இலங்கைக்கு முக்கியமானதொரு புரட்சிமிகு சட்டத்திருத்தமாகும்.

அத்தோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் இல்லாது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கான விசேட சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான வரைபை ஜனவரி 31 இற்கு முதல் பெற்றுக் கொள்ள நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சீனி வரி மோசடி தொடர்பில் கோத்தாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டம்

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின்  அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக  கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய,  நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி,  பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற  பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்து ஜனநாயக கட்டமைப்புக்களையும் தாக்கியுள்ளது – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலனித்துவ விடுதலைக்குப் பின்னர் இலங்கையில் எழுச்சியடைந்த ஊழலானது ஜனநாயகத்தின் வீழ்ச்சியுடன் சமாந்தரமாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிலைமையானது அரசியல் கட்டமைப்புகள், ஜனநாயக அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் சமூகத்தின் நெறிமுறை வாழ்க்கை ஆகியவற்றின் சிதைவுக்கு காரணமாகியுள்ளது.

சாதாரணமாக, சமூகம் மற்றும் அரசியல் வாழ்வில் ஊழலின் எதிர்மறையான தாக்கம் மிகவும் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றது. இந்நிலையானது இலங்கையின் அரசியலில் ஊழலானது ஒரு புற்றுநோயாக உள்ளது. அதேநேரம், இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயகமயமாக்கலுக்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

1990களின் முற்பகுதியில் இருந்து ஊழலை ஒழிப்பது தொடர்பில் பொது அக்கறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஊழல் ஒழிப்பு என்பது பொதுவானதொரு அரசியல் கோஷமாக மாறியுள்ளது.
இருப்பினும், இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்காக சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், அரசியல் பிரசாரம் மூலமாகவும் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இடையறாத தோல்விகளை மட்டுமே விளைவாகக் கொண்டிருக்கின்றன.

இதனால் தற்போது ஊழலுக்கு எதிரான போராட்டக் கோஷம் பொதுமக்களின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையே காணப்படுகின்றது. ஆனால், அண்மைக் காலத்தில் இலங்கை பிரஜையின் அரகலய போராட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதிலொன்று, முறைமை மாற்றம்; மற்றையது, இலங்கை குடிமக்களை உள்ளடக்கிய ஊழலற்ற அரசியல் கலாசாரம் ஆகியனவாகும்.

அத்துடன், ஊழலுக்கு இடமில்லாத புதிய அரசியல் கலாசாரத்துக்கான போராட்டத்தை, அரசியல் வர்க்கத்தை விடவும் எமது நாட்டின் குடிமக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை விட்டுவிட முடியாது. மேலும், ஊழலில் அரசியல்வாதிகளே முக்கியஸ்தர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்பதால் நாட்டின் அரசியலில் ஊழல் என்பது ஜனநாயக அரசியலின் அமைப்புக்கொள்கையாக மாறிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, அரச நிறுவனங்கள், கலாசாரங்கள், தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறைகளுக்குள் ஊடுருவியுள்ளது. இதனாலேயே ஒவ்வொரு புதிய அரசாங்கமும் ஊழல்வாதிகளின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்துக்குரிய நற்பெயரை கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

ஊழலற்றவர்களின் கூட்டணி என்ற அரசியல் தரப்பின் இணைவானது புதிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கூட்டமாகும். அதுமட்டுமன்றி, ஊழலின் பங்காளிகளாக அரசியல் வர்க்கம், அதிகாரத்துவ வர்க்கம் மற்றும் பெருவணிக வர்க்கத்துறையினர் உள்ளிட்டவர்களை கொண்ட முத்தரப்புக் கூட்டணியாகும். ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் இதனை புரிந்துகொண்டாலேயே அவற்றை அடையாளம் கண்டு, முதுகெலும்பை உடைத்தெறிய முடியும் என்றார்.

கொள்ளையர்கள் அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் -சஜித்

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் சிறப்பாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

44 இலட்சம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக எமது ஆட்சியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை எமது அரசாங்கத்தில் பொறுப்பேற்கவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கூடிய சிறந்த நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

சர்வ பொருளாதார முறைமையொன்றை ஐக்கிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தும். ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.