நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து தவிர கரிசைனை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் கடந்த 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இம்மீளாய்வின்போது இலங்கை தொடர்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வருங்காலங்களில் இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய 12 பக்க இறுதி அறிக்கை மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் வியாழக்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டம், 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டம், 2017 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச்சட்டம், 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம், 2022 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க காணி அபிவிருத்திச்சட்டம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் மற்றும் விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் ஆகியவற்றிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகக்கொடூரமானதும் மனிதத்தன்மையற்றதுமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்திலும் இலங்கை இணைந்துகொண்டமையை மனித உரிமைகள் மீளாய்வுக்குழு வரவேற்றுள்ளது.
அதேவேளை இலங்கையில் தொடர்பான மீளாய்வின்போது அடையாளங்காணப்பட்ட கரிசனைக்குரிய விடயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய பரிந்துரைகளின் சுருக்கம் வருமாறு:
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை என்பன கரிசனையைத் தோற்றுவித்துள்ளன.
எனவே அரசாங்கம் அதன் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வதுடன், அதனூடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் நிறைவேற்றதிகாரத்துக்கும் ஏனைய கண்காணிப்புக்கட்டமைப்புக்களுக்கும் இடையிலான நேர்த்தியான கடப்பாடு பேணப்படுவதும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அதேபோன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் எதிர்காலத் திருத்தங்கள் ஊடாக இம்மறுசீரமைப்புக்கள் தன்னிச்சையான முறையில் நீக்கப்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.
அடுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ள போதிலும்கூட, உறுப்பினர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மையும், பல்வகைமையும் பேணப்படாமையைக் காரணமாகக்கூறி தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டணியினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘பி’ நிலைக்குத் தரமிறக்கப்பட்டமை குறித்துக் கவலையடைகின்றோம்.
ஆகவே மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான தேசிய கட்டமைப்புக்களுக்குரிய நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டு;ம்.
மேலும் நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்துத் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.
நாட்டின் உள்ளக சட்டங்கள் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களையும், இனப்படுகொலையையும் குற்றமாக வரையறுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.
போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ள போதிலும், கடந்த 2006 – 2009 ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமையும், வவுனியாவில் இயங்கிய ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன தொடர்பில் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையும் கரிசனைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன.
அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விசாரணை செயன்முறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், தலையீடுகள் குறித்து விசனமடைகின்றோம்.
அத்தோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் என்பன தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆயுதமோதலின்போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் பாலினத்தை அடிப்படையாகக்கொண்ட மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவரல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், மரணதண்டனையை இல்லாதொழித்தல், அவசரகாலநிலையை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாத்தல், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.