IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது – ரொய்ட்டர்ஸ் தகவல்

சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாட்டின் நிதியத்தின் பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் IMF பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின் ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீனா துரிதப்படுத்தவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீன துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜி20 பொதுகட்டமைப்பு தொடர்பிலும் விசேடமான சில நிலைமைகள் தொடர்பிலும் நாங்கள் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்பியா இலங்கை தொடர்பான கடன் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் சர்வதேச நாணயநிதியமும் ஏனைய சர்வதேச கடன் நிதியமைப்புகளும் நிதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை தொடர்பான மாநாடு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக் கொள்ள உள்ளமையுடன் தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடு வியாழக்கிழமை (டிச.08) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது.

‘உலகலாவிய பொது அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சீன அதிகாரிகன் , உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பீஜிங் மாநாட்டில் சீன அதிகாரிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடன் நெருக்கடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பீஜிங் மாநாட்டில் பங்கேற்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதானிகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமையவே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகள் குழுவொன்று பீஜிங்கிற்கு விஜயம் செய்துள்ளது.

‘ இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா சாதகமான முறையில் செயற்படும் என்று அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்தால் மாத்திரமே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் – ரணில்

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். அத்தோடு மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு திங்கட்கிழமை (டிச. 05) ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ‘ கொந்தளிப்பில் இருந்து வாய்ப்புக்கு மீள்வது’ என்ற தொனிப்பொருளின் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

2050ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணியாகும்.

பழைமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது அந்நியச்செலாவணியே ஆகும்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளது. இதனால் இச்செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டியுள்ளது. வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு

இலங்கையின் கடன்சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளின் கடன்தறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக  சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதியமைப்புகளுடனும் சீனாவிற்கு நீண்ட கால நல்லுறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடிகள் சவால்களிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிதியமைப்புகளிற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன் சுமையை குறைத்து பேண்தகு அபிவிருத்தியை சாத்தியமாக்குவதற்கும் உரிய சர்வதேச நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயற்படும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு பிற்போடும் யோசனைய முன்வைத்துள்ளது பாரிஸ் கிளப்

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான் டைமஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகஇலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளதுடன் கடன் மறுசீரமைப்பிற்கு 15 வருட கால அவகாசத்தை வழங்கும் யோசனையையும் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான்டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குளோபல் சவுத் நாடுகள் என அழைக்கப்படுகின்ற ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் குளோபல் நோர்த் போன்று ஹெயர் கட்டில் ஈடுபடவேண்டும் என பாரிஸ்கிளப் வேண்டுகோள் விடுத்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.