ரணிலை வடக்கு மக்கள் நம்ப தயாராக இல்லை – சஜித்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை. எனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“வடக்கு மக்கள் மீது ஜனாதிபதிக்கு உண்மையான கரிசனை இருந்தால் அவர் வவுனியாவில் வைத்து வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னர் நிறைவேற்றிக் காட்டட்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்தார்.

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும், 75ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை கடந்த சனிக்கிழமை வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு மாகாணத்துக்கு நான் விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லவுள்ளேன். வடக்கு மக்கள் படும் இன்னல்களை நான் நேரில் ஆராயவுள்ளேன். ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் விரைந்து தீர்வு காண்பேன்.

வடக்கு மக்களுக்கு நான் என்றுமே நன்றியுடையனவாக இருக்கின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளை எனக்கு அவர்கள் வழங்கினார்கள்” – என்றார்.

 

Posted in Uncategorized

சுயாதீனமாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தனர்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர்.

சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஜயரட்ண ஹேரத் சந்திம வீரக்கொடி அனுரபிரியதர்சன யாப்பா பிரியங்கர ஜெயரட்ண டபில்யூடீஜே செனிவரட்ண ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது – சஜித்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்க முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு உபாய வார்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும்,தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள் அபிப்பிராயத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால்,எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் எனவும், மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை சந்திப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டம், அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித்

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் நாம் அஞ்சப்போவதில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச அடக்குமுறைக்கான இந்த எதிர்ப்பு பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலைய பகுதிவரை செல்வதற்கு இருந்தது. எனினும் சட்டத்துக்கு மதிப்பளித்து கொழும்பு வர்த்தக மையப்பகுதியிலேயே எமது இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதறகான இந்த பயணத்தில், தேர்தலை நடத்த செய்வதற்கான பயணத்தில், அரசாங்கத்தை மாற்றும் பயணத்தில் முதலாவது சிறிய நடவடிக்கையாக இன்றைய இந்த பேரணி அமைந்துள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டாம், பேரணிக்காக வீதியில் நடந்து திரிய வேண்டாம் என்று எமக்கு கடிதம் அனுப்பினர்.இளைஞர் சமூகத்தின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எமது ஜனநாயக உரிமையை, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரின் உரிமைகளை இன்று பறித்துள்ளனர்.தற்போது மிலேச்சத்தனமான அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. திரிசங்கு நிலையில் உள்ள அரசாங்கமாகும்.

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியல் இருக்கின்றது. எனினும் இவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

நாம் எந்த நேரத்திலும் எதற்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம். எனவே எமது அஹிம்சை ரீதியான, ஜனநாயக ரீதியிலான இந்த போட்டம் வெற்றிபெறும்.

இன்று இந்த பேரணியை நாம் மிகவும் அமைதியான முறையிலேயே முன்னெடுக்கின்றோம்.நாட்டின் பாதுகாப்பு துறையுடன் மோதுவதற்கு நாம் தயாரில்லை.எனினும் மக்கள் பிரநிதித்துக்கான கடமைகளை ஆற்றாது நாட்டை சீரிழிக்கும் வரிச்சுமையை திணிக்கும் மக்களின் வறுமை நிலையை அதிகரிக்கும் அரசாங்ததுடனயே எமது போராட்டம் உள்ளது.

அரச அடக்குமுறைக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், எதிர்க் கட்சி அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மருதானை எல்பிஸ்ட்ன் அரங்குக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பயணித்தது.

ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஒன்று திரள்வோம், உரிமைக்காக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டப்பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது, கொழும்பு வர்த்தக மையப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது பொலிஸாரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரிடம் முறுகலில் ஈடுபட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அடக்குமறையை நிறுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் தடைவிதிப்பு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.