அரச அடக்குமுறைக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், எதிர்க் கட்சி அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மருதானை எல்பிஸ்ட்ன் அரங்குக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பயணித்தது.

ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஒன்று திரள்வோம், உரிமைக்காக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டப்பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது, கொழும்பு வர்த்தக மையப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது பொலிஸாரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரிடம் முறுகலில் ஈடுபட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அடக்குமறையை நிறுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் தடைவிதிப்பு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.