வவுனியா – செட்டிக்குளத்தில் முளைத்தது புத்தர் சிலை!

வவுனியா – செட்டிக்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரெனப் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியா என்று தமிழ் மக்கள் கேள்வியும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம் – மன்னார் வீதியில், பழைய புகையிரத நிலையம் முன்பாக – முருகன் கோவில் அண்மையாக, வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் அந்தப் பகுதிக்கு வந்த சிலரே கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று அறிய வருகின்றது. தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் இந்தப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அவர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – ஜனாதிபதி

“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.

நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசு நடவடிக்கை எடுக்கும். எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம்.” – என்றார்.

நயினாதீவில் வீதி ஒன்றுக்கு சிங்களப் பெயர்

யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீதி ‘‘அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை’‘ என இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு செல்லும் படகு பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவிலும் மற்றும் நாகவிகாரையும் அமைந்துள்ளது.

இதற்கான படகுச் சேவையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும்போது இங்கு இரண்டு விதமான இன பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயணிப்பார்கள்.

ஆனால், தமிழிலே நயினாதீவு என்பதுதான் தொடக்கத்தில் இருந்து பாவனையில் உள்ள பெயர். அப்படி இருக்கும்போது தற்போது நாகதீப என்று மட்டும் எழுதப்பட்டுள்ள பயண கட்டணச் சீட்டு வழங்கப்பட்ட விடயம் மிகப் பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப் பயணக் கட்டணச்சீட்டு சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக கொஞ்சம் கொஞ்சமாய் தமிழர் தேசம் பறிபோய்கொண்டு தான் இருக்கிறது என்பதை வெளிவரும் அனைத்து விடயங்களும் உறுதிப்படுத்துபவையாகவே காணப்படுகிறது.

வெடுக்குநாறி ஆதிசிவனாலய அழிப்பு, திருக்கோணேசர் ஆலயக்காணி அபகரிப்பு முயற்சி, வடமுனை நெடிய கல்மலை பெளத்தாலய நிருமாணிப்பு, கரடியனாறு குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு முயற்சி போன்ற பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகையில் வடக்கு கிழக்கில் பல சைவ ஆலயங்கள் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன . அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகப் பிரதேசங்களைக் காக்க இரு கட்டமைப்புக்கள் உருவாக்கம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது.

தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணிகள் அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக அடையாளம் காண 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அத்துடன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைகழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஜக்கியதேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்

மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை ; இராணுவம், கடற்படையால் நிர்மாணப் பணிகள்

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.

எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து – ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் “கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.

இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு – பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருகோணமலையில் ஏற்கனவே இந்துக்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு – குருந்தூர்மலை, வவுனியா – வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள முல்லைத்தீவு மணற்கேணி பூர்வீக வரலாற்று பிரதேசங்கள் விகாரைகளாக மாற்றம்

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிப் பகுதிக்குரிய தமிழ் மக்கள் சிலர், மணற்கேணிப் பகுதியிலுள்ள தமது காணிகளை துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி தருமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தைக் கோரியுள்ளனர்.

அந்தவகையில் மணற்கேணிப்பகுதி காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்து, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனை இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்க முடியுமென முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மணலாறு – மணற்கேணி கிராமம் என்பது, தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் ஊடறுத்துப் பாய்கின்ற பறையன் ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள வடக்கிற்குரிய, தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமமாகும்.

மணற்கேணிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் 36தமிழ் குடும்பங்கள் பூர்வீகமாக இருந்ததாகவும், இதனைவிட குறித்த பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு வயல் நிலங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் 1984ஆம் அண்டிற்கு முன்னர் மணற்கேணிப் பகுதியில் பாரிய கல்நடை மற்றும், விவசாயப் பண்ணைகளுடனும், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் என்பவற்றுடனும் இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தார்கள் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு செழிப்பாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இந் நிலையில் தற்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கள் மிகத் தீவிரமாக முனைப்புப் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழலில் கடந்த 26.03.2023 அன்று மணற்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களுக்கு  கொக்குத்தொடுவாய் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கள ஆய்வின்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் பௌத்த மயமாக்கல் மற்றும், சிங்கள ஆக்கிரமிப்புமுயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதும் இனங்காணப்பட்டது.

குறிப்பாக மணற்கேணி மற்றும், அதனை அண்டிய எல்லைக்கிராமங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் துப்பரவு செய்யப்படுவதும், தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதும், தமிழர்களின் பூர்வீக தொல்பொருள் எச்சங்கள் உள்ள இடங்கள் விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டிருந்தது.

அதன்படி மணற்கேணி மற்றும் அதனை அண்டிய எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் உள்ள இடங்கள் அக்கரவெலிய விகாரை, வண்ணமடுவ விகாரை, மகாப்பிட்டிய விகாரை என விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ்வாறாக பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் மாணலாறு – மணற்கேணி எல்லைக்கிராமத்திற்குரிய மக்கள் சிலரே இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்து தமது காணிகளைத் துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.

இக் கலந்துரையாடல் தொர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்பு மணற்கேணி என்னும் இடத்திலே மத்திய தரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுடைய உரிமையாளர்களில் சிலர் வருகை தந்திருந்தனர்.

குறித்த காணிகளைத் துப்பரவுசெய்து பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த செயற்பாடுகளை, கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம்தான் மேற்கொள்ளவேண்டும்.

எனவே கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, நாம் அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்கி, குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இதுதவிர வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமான முறையில் மணற்கேணிப் பகுதியில் காணி துப்பரவு செய்வதான முறைப்பாடும் எமக்குக் கிடைத்துள்ளது.

எனவே நாம் அது சம்பந்தமாகவும், குறித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு அறிவித்தல் வழங்கி, அவ்வாறான நடவடிக்கைகள் இருப்பின், நாம் அவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் – என்றார்.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புதுவருடத்தின் பின்னரே தீர்வு

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்மையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என்றார்.

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருநாட்டுக்கேணி தமிழர் பூர்வீக காணிகளில் சிங்களக் குடியேற்ற முயற்சி ; மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 03.04.2023 இன்று கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச்சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.