7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் குறித்த 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் வருமாறு

1. ஐக்கிய காங்கிரஸ் கட்சி
2. இரண்டாவது தலைமுறை
3. ஶ்ரீ லங்கா சமூக ஜனநாயகக் கட்சி
4. நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசியக் கட்சி
6. மக்கள் அறிவுசார் முன்னணி
7. ஈரோஸ் ஜனநாயக முன்னணி
3. ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

கடந்த நவம்பர் 28ஆம் திகதி கூடிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட முடிவு எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை இலங்கையில் 79 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்ட 7 அரசியல் கட்சிகளுடன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம்

தேர்தல்களின் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதற்கமைய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் அதிக பணத்தை செலவிடும் வேட்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (நவ. 22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் , பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிக பணத்தை செலவிடுபவர்களுக்கு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் அதிக பயன் கிடைக்கிறது. சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களைப் பயன்படுத்தியும் இவ்வாறானவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தற்போது அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கமைய ஜனாதிபதி, பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றம் என சகல தேர்தல்களையும் உள்ளிடக்கியே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. எனவே ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் அளவை விட கூடுதல் பணத்தை செலவிடுபவர்களுக்கு அவர்களின் பாராளுமன்ற அல்லது உள்ளுராட்சி மன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அத்தோடு தண்டப்பணத்தை அறவிட்டு தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரச சொத்துக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதற்கும் , வெளிநாடுகளிலுள்ளவர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நிறைவடைந்து 3 வாரங்களுக்குள் , தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்த பணத்தொகை தொடர்பில் உறுதிமொழியளிக்க வேண்டும்.

செலவிட்ட பணத்தொகை எவ்வாறு கிடைக்கப் பெற்றது , யாரேனும் அதனை வழங்கியிருந்தால் யார் அந்த நபர் உள்ளிட்ட முழுமையான தகவல்களை உறுதி மொழியூடாக வழங்க வேண்டும். உறுதிமொழியில் பொய் கூறப்பட்டமை இனங்காணப்பட்டால் , அது குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். அது மாத்திரமின்றி பொய்யான உறுதி மொழி வழங்கியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்குவதற்கான அதிகாரமும் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தலை ஒத்திவைக்க முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு உபாய வார்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும்,தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள் அபிப்பிராயத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால்,எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் எனவும், மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை சந்திப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டம், அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை கூட தெரிவு செய்வார்கள் – தேர்தல் ஆணையாளர்

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் ஆம் அவர் வெற்றி பெறுவார் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது,இதனை உயர்த்துவதற்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கவேண்டும்,இதனை மாற்றாமல் எங்களால் ஊழல்மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மொடல்கள் நடிகர் நடிகைகள் பாடகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் – பவ்ரல்

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதபோதும் புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டடி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்யுமாறு தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய, அதன் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்ட ஒரு வருடகாலம் 2023 மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்றது என்பது அறிந்த விடயம்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காரணம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு திருத்த யோசனைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவது இரகசியமான விடயமல்ல. அந்த யோசனைகளில் சில யோசனைகள் நியாயமானதாக இருந்தாலும் அதற்றை செயற்படுத்துவதற்கு எடுக்கப்படும் காலத்துக்கமைய மற்றும் இவ்வாறான திருத்தங்களால் கடந்த காலங்களின் அனுபவங்களைக்கொண்டு பார்க்கும்போது, இந்த நடவடிக்கையின் இறுதி பெறுபேறாக இருப்பது நாள் குறிப்பிடாமல் தேர்தல்லை ஒத்திவைப்பதாகவே அமைந்துள்ளது.

அதனால் இந்த நிலைமையை தவிப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போது அதிகாரம் இருக்கும் ஒரே நிறுவனமான உங்கள் ஆணைக்குழு, விரைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்தால் அதனை பிற்போடுவதற்கு எந்த நிறுவனத்துக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தடையாக இருந்த 2022 தேர்தல் வாக்காளர் இடாப்பு, 2022 ஒக்டோபர் 31ஆம் திகதியாகும் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.

அதனால் விரைவாக தேர்தலை அறிவிப்பு செய்து, மக்களின் வாக்குரிமையை பாதுகாத்துத் தருமாறு உங்களையும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால், ஏதோ ஒரு முறையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் நோக்கில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக, மீண்டும் தேர்தலை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு மீதும் குற்றம் சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

அத்துடன் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றபோதும் ஆணைக்குழுவுக்கு, புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, தங்களின் அடிப்படை கடமை மற்றும் சாதாரண செயற்பாடுகளின் ஒரு பகுதியான உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நம்புகின்றோம். அதனால் இது தொடர்பாக நீங்கள் விரைந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.