நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​தினசரி 40 அமெரிக்க டொலர்களில் இருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்படும் சாதாரண கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவோ அல்லது வெளிநாட்டு விவகாரங்களுக்காகவோ வெளிநாடு செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைத்து 10 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தேர்தலுக்கு பணம் கொடுக்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கு தம்முடைய அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு தனது அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு முன்னதாக அறிவித்திருந்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிட தேவையான பணத்தை வழங்க கோரி நிதி அமைச்சுக்கு கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாக கங்கானி லியனகே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலத்தில் பகலில் 35 பொலிஸ் அதிகாரிகளும் இரவில் 28 பொலிஸ் அதிகாரிகளும் தேவைப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரச அச்சக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு வருமானம் போதாது – நிதி அமைச்சு செயலாளர்

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வருமானத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை

பயணிகள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பதவி மீண்டும் அலி சப்றிக்கு !

நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.

புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.

இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.