ஹர்த்தால் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்னாயத்த கூட்டம்

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது.

ஹர்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச நாடுகளுக்கு கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு கூட்டாகக் கடிதமொன்றை எழுதுவதற்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச சமூகத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம் இன்றைய தினம் (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படுமென கட்சி பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், தனக்கு அச்சுறுத்தல் இருந்ததை நீதிவான் வெளிப்படையாகவே கூறியிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் நீதிபதிக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் எதிரானவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும், நாட்டின் நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை – சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு – தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று(09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்கவும், நீதிபதிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதை நிறுத்தவும்’ கோரி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு சட்டத்தரணிகள் இன்று (09) காலை கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினரை மிரட்டிய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி

இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

ஆகவே இவர்களை உடனடியாக பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு வியாழக்கிழமை (5) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இதன்போது இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அப்பாவி இராணுவ வீரர்களின் தொழில்வாய்ப்புக்களை முடக்கும் வகையில் தீர்மானம் எடுத்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவில் யோசனை முன்வைத்தேன்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகும் அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட கூடாது என பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான விதிவிதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பாதுகாப்பு செயலாளர் உட்பட இராணுவ தளபதி நான் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டி எனக்கு தெரிவுக்குழுவின் தலைவர் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவுக்கு பாராளுமன்ற விதிவிதானங்கள் ஒன்றும் தெரியாது.

நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரச்சினையில் உள்ளதால் அவர் எனக்கு எதிராக தெரிவுக்குழுவுக்குள் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தவில்லை. அத்துடன் தெரிவுக்குழுவுக்குள் பேசப்பட்ட விடயங்களின் குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்காக அதிக நிதி செலவிடப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் காலையில் நடைபவணி செல்லும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு மக்கள் நிதி செலவிடப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் எனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தமை நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைக்குரிய விடயமாகும்.

ஆகவே இவர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்க தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவுஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

நீதிபதி வெளியேறியமைக்கான சூழலை அறிந்து நீதியமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறிய சூழலை உணர்ந்து, அவரது நிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து கருத்திடுவது அமைச்சருக்கு நல்லது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நீதிபதி திரு. ரி. சரவணராஜா தனது பதவிகளைத் துறந்து வெளியேறியது தொடர்பில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு. ரி. சரவணராஜா அவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கபட்டு தனது நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றார். இலங்கையில் நீதிபதி ஒருவர் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அடிப்படையில் நாட்டைவிட்டு வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

நீதிபதி திரு. ரி. சரவணராஜா அவர்கள் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தீர்ப்புக்களை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த இனவாத சக்திகள் அவருக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் அவரை அச்சுறுத்தும் தொனியில் பேசியதுடன், பௌத்த நிறுவனங்கள் அவருக்கு எதிராக சில வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தன. இதுமாத்திரமல்லாமல், புலனாய்வுப் பிரிவினிருடைய தொடர்ச்சியான கண்காணிப்பு வலயத்திற்குள்ளும் அவர் உட்பட்டிருந்ததாகவும் அவரே தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தோன்றுகின்றது.

இலங்கையின் நீதித்துறையில் ஒரு தமிழ் நீதிபதி ஏற்படுத்தக்கூடிய தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள பௌத்த பிக்குகளோ, சிங்கள பௌத்த இனவாதிகளோ தயாராக இல்லை என்பதை குருந்தூர்மலை போன்ற அண்மைய சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் இலங்கையின் நீதித்துறையினூடாக எத்தகைய நீதி நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்கையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் அவரது பாராளுமன்ற உரையின்போது நீதிபதி அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தால் அல்லது அவர்மீது கண்காணிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவர் உனடியாகவே சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும்படி ஆணையிட்டிருக்க முடியும் என்பதுடன் நீதித்துறை என்பது சுதந்திரமானது என்பதுடன் அது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்குக் கட்டுப்பட்டது என்றும் இதில் அரசாங்கத்தின் மேல் குற்றஞ்சாட்டுவதில் எந்தவித அர்த்தமுமில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஒருவிடயத்தை நீதியமைச்சருக்கு முன்வைக்க விரும்புகின்றோம். இலங்கையின் நீதித்துறை என்பதும் பொலிஸ் என்பதும், இராணுவம் என்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது. குருந்தூர்மலையில் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என இவருக்கு முன்னர் பதவியிலிருந்த நீதிபதி லெனின்குமார் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருந்தார்.

ஆனால் அந்தக் கட்டளை மீறப்பட்டு பௌத்தபிக்குகள் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் ஆதரவுடன் அங்கு ஒரு புதிய பௌத்த கோயிலை கட்டி முடித்திருக்கின்றனர். இது நீதிமன்றத்தீர்ப்பை அவமதிக்கும் ஒரு செயற்பாடு. இதற்கு எதிராக நீதி அமைச்சோ அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவோ மேற்படி சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்குத் தயாராக இல்லை.

பொலிசாரோ இராணுவத்தினரோ தமிழ் நீதிபதிகளின் ஆணைகளை கட்டளைகளை மதித்து நடப்பதாகவும் தெரியவில்லை. இவ்வறான சூழ்நிலையில், திரு. சரவணராஜாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதிபதி ஆணையைப் பிறப்பித்திருக்கலாம்இ கைது செய்திருக்கலாம் என்பதெல்லாம் போலியானதும் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்தாகவே இருக்கின்றது.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றது என்று நம்பினால் மட்டுமே அவர் கட்டளைகளையோ ஆணைகளையோ பிறப்பிக்க முடியும். அவரது உயிருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள பொழுது அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்காது. அதைத்தான் சரவணராஜாவும் செய்திருக்கிறார் என்பதை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச புரிந்துகொண்டால் நல்லது.

இதுவெறும் சரணவராஜா என்ற நீதிபதி தொடர்பான விடயம் மாத்திரம் அல்ல. இலங்கையின் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் வெளிக்காட்டி நிற்பதுடன்இ இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் தமிழர்களுக்கு சார்பாக அமைந்துவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலைகூட அவர்களுக்கு இல்லை என்பதையும் வெளிக்காட்டி நிற்கிறது. இவ்வாறான நிலையில், இலங்கையின் நீதித்துறையிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நீதித்துறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழப்பதற்கான காரணிகளுக்கு இது மேலும் வலுவூட்டியுள்ளது.

அதுமாத்திரமல்லாமல்,மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டது தொடர்பாக திருகோணமலையில் நடைபெற்ற வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றி, சிங்கள ஜூரிகளைக் கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.

மீசாலையில் தமது சொந்தக் காணிகளைப் பார்வையிடச் சென்ற 8க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு மலசலக்கூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஒரு இராணுவ சிப்பாய்க்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது. ஆனால், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதும் அவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

சிங்கள இராணுவத்தினரோ அல்லது உயர் பதவிகளில் உள்ளவர்களோ வடக்கு-கிழக்கு நீதிமன்றங்களில் அவர்களது வழக்குகள் விசாரிக்கப்படும்பொழுது தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று காரணம்கூறி அவற்றை சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை வடக்கு-கிழக்கு மேல் நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியபொழுது அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது.

இலங்கையில் நடந்துமுடிந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார்கள். அது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. தங்களது இராணுவம் புனிதமானது, அவர்கள் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் கடப நாடகம் ஆடியது. பின்னர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உட்ப 269க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் சூத்திரதாரிகள் யாரென பிரித்தானியாவின் சானல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவையென கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற அரசியல் மற்றும் சமய முக்கியஸ்தர்கள் குரல் கொடுத்தார்கள்.

அவ்வாறு சர்வதேச விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் தமிழ் மக்களின் கோரிக்கையான யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே அதனைக் கைவிடும்படி பிரதி வெளிவிவகார அமைச்சர் கோரியிருந்தார். இதற்கமைய மேற்படி சர்வதேச விசாரணையைக் கோரியோர் தங்களது கோரிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கின்றனர்.

அதாவது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் மிகத்தெளிவாக இருப்பதையே இது காட்டுகின்றது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு நீதியமைச்சர் பேசுவது நல்லது என்று கருதுகின்றோம்.

சட்டங்கள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழருக்கு எதிரானதாக வேண்டும் என இனவாதிகள் அதிகாரம் செலுத்துகின்றனர். – மனித  சங்கிலி போராட்டத்தில் நிரோஷ்

தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக மருதனார்மடம் முதல் யாழ்நகர் வரை பேரணியின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்கள் இந்தளவு தூரம் போராடுகின்றனர் என்பதில் இருந்து எம்மிடத்தில் காணப்படும் ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு நீதித்துறையின் சுதந்திரத்தினை மீறி ஏனும் தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால், இலங்கை அரச கட்டமைப்பு பயங்கரவாதச் சட்டம், அவரகாலச்சட்டம், தற்போது கொண்டுவரப்படவுள்ள சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பிற்போக்கானதும் இனவாத நோக்கத்தினை நிறைவேற்றக்கூடிதுமான தொல்லியல் சட்டங்கள் என எமக்கு எதிராக பல சட்டங்களை பிரயோகிக்கித்துவருகின்றது. பாராளுமன்றில் காணப்படும் இனவாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு எண்ணிக்கையில் குறைவானதேசிய இனங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றி அவற்றை நீதிமனங்களின் வாயிலாக எம்மீது  அரச கட்டமைப்பு பிரயோகித்தது. இவ்வாறான சட்டங்களினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் உள்ள சட்டங்கள் மாத்திரமல்ல நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் சிங்கள பேரினவாத கட்டமைப்பிற்கு சாதகமாகக் கணப்பட வேண்டும் என்று தான் அரசும் சிங்கள பேரினவாதிகளும் அதற்காக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்கின்றார்கள்.

தற்போது தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்காக குருந்தூர்மலை போன்ற இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களை தொல்லியல் திணைக்களம்  உள்ளிட்ட அரச திணைக்களங்கள்; அவமதித்துள்ளன.  பேரினவாத சிந்தனைகளின் அடிப்படையில் நீதிபதிகளை அச்சுறுத்தி தீர்ப்பினை அவமதிக்கின்றனர். நீதித்துறையை அவமதிக்கின்னர். இந்த நாட்டை ஏனைய இனங்கள் வாழ முடியாத தனிச்சிங்கள பௌத்த இனவாத தேசமாகக் கட்டியெழுப்பவே இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எந்த nருக்கடிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உள்நாட்டுப்பொறிமுறை தீர்வாகது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுள்ளது என ரொலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி, நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு, நீதி தேவதையின் உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் நீதி தேவதையின் உருவ சிலைக்கு முன் மண்டியிட்டு, நீதி கோரினர்.