பசிலுடன் இணைந்து ரணில் செயற்படுவது ரணிலுக்கு தடையை ஏற்படுத்தும் – உதய கம்மன்பில

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மே தின கூட்டத்துடன் மக்களாணையை வென்று விட்டோம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது.கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படை கொண்டு பொதுஜன பெரமுனவுக்கு குறிப்பாக ராஜபக்ஷர்களுக்கு மக்களாதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. பொதுஜன பெரமுன பிரம்மாண்டமாக அமைத்த கூடாரங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.

நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற நிலை மாற்றமடைந்து விட்டது.மக்கள் தெளிவாக உள்ளார்கள்.மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆட்சி செய்தது.ராஜபக்ஷர்களின் முறையற்ற பொருளாதார கொள்கையை அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.சுட்டிக்காட்டிய குறைகளை அப்;போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருத்திக் கொள்ளவில்லை.மாறாக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது சகாக்கள் ஜனாதிபதிக்கு பாரிய தடையாக இருப்பார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணையுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.ராஜபக்ஷர்களுடன் இனி ஒருபோதும் ஒன்றிணைய போவதில்லை.அரசியல் ரீதியில் தனித்து செயற்படுவோம் என்றார்.

மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனிமேல் நடைமுறையில் இருக்காது என அறிவித்தது.

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறியதாகவும், எனினும், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என கோட்டாவுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு தாங்கள் முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை பதவியிலிருந்து விரட்டி ஜனாதிபதியாவதற்கு பஸில் திட்டமிட்டார் – உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்கவே பஸில் ராஜபக்ஷ திட்டம் தீட்டினார். கோட்டாபயவை விரட்டி பாராளுமன்றம் ஊடாக தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயல்பட்டார்” – என்று பிவித்திரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “கோட்டாபயவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை.

நிலைமையைத் தனக்கு சாதகமாக பயன் படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார். பொருளாதார நெருக்கடி உக்கிர மடைந்து கோட்டாபய பதவியை விட்டு ஓடினால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார்.

அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார். இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார். அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணி நேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.

இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டாபய பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார். அப்படி நடந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாவது தான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்து கொண்டதால் எல்லாம் பிழைத்துவிட் டது” – என்றார்.

பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ, மற்றும் பல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றத்தை ஏற்படுத்த பஸில் ஞானி இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாடு திரும்பினார் என்பதற்காக நாட்டில் புதிதாக ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (20) நாடு திரும்பியமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பஸில் ராஜபக்சவின் வருகையை ‘மொட்டு’க் கட்சியின் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர் வருகை தந்தால் நாடு பிரகாசிக்கும் என்றார்கள். இறுதியில் என்ன நடந்தது?

அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடு வங்குரோத்து அடைந்தது.

எனவே, பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நிதி அமைச்சர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்பன நாடு வங்குரோத்து அடைவதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்திருந்தது.

இந்த அரசைக் கொண்டு நடத்துபவர் பஸில் ராஜபக்ச என்பது தற்போது தெளிவாகின்றது.

அமைச்சுகளுக்கும் பதவிகளுக்கும் நபர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பை அவர் திரைமறைவிலிருந்து செயற்படுத்தி வருகின்றார்.

அரசையும் ஜனாதிபதியையும் இயக்கும் நபராகப் பஸில் ராஜபக்ச திறைமறைவிலிருந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.

பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்

ஒன்றரை மாதங்களின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றார்.

இந்நிலையில் பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஆளும்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை அவர் எடுப்பர் என்றும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவை வரவேற்க முக்கிய அமைச்சர்களும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நளின் பெர்னாண்டோ, திலும் அமுனுகம உள்ளிட்டோரும் கட்டுநாயக்க விமான நிலையதிற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் இலங்கை திரும்புகிறார்: பட்ஜெட் வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மை பெற திட்டம்!

வரவு செலவு திட்டத்திற்கு  2/3 பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து மீண்டும் இலங்கை திரும்புகிறார்.

அண்மைய அரசியல் நெருக்கடியின் போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பின்னர் சனிக்கிழமை இலங்கை திரும்பவுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்திற்கான 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராஜபக்ச, சனிக்கிழமை இலங்கைக்கு வருவார் என்றும், நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தது போல் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், உடனடியாக டிசம்பரில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிப்பின் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குப் பிறகு புதிய தேர்தலுக்குச் செல்வது என்ற முடிவு எடுக்கப்படும் வரை அரசாங்கம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்படும் வகையில் வரவு செலவு திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதே முன்னாள் நிதியமைச்சரினதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பசில் பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பார் எனவும் மற்றும் அடித்தள மட்டத்தில் கட்சியின் பிரபலத்தை மீண்டும் பெறுவதற்காக தரை மட்ட பிரச்சாரத்தை தொடங்குவார். பசில் நாடு திரும்பியவுடன் கட்சியில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized