இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்புவிடுத்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் சிங்கப்பூர் ஐக்கியத்திற்கும் தனது மக்களின் நலனிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் தலைமைத்துவம் மதமொழி அடிப்படையில் சமூகங்களை பிரித்ததை கடுமையாக கண்டித்துள்ளார்.

சிங்கப்பூரின் வலுவான சட்டஅமைப்பினை பாராட்டியுள்ள அவர் அது ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு அலட்சியம் செய்யப்படுவதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சுயநலம் மிக்க நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது தேசத்தின் நலனை விட தனிப்பட்ட நலனிற்கு முன்னுரிமையளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் சுதந்திரதின கொண்டாட்டங்களின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் அரசாங்கம் தனது சுதந்திரத்தை கொண்டாடுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசம் ஒடுக்குமுறைமிக்க ஆளும்வர்க்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டு;ம் எனவும் தெரிவித்துள்ள கர்தினால் நாட்டையும் பல்வேறுபட்ட மக்களையும் நேசிக்கும் தலைவர்களை தெரிவுசெய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஊழல்மிக்க தலைவர்களை வெளியேற்றவேண்டும் புதிய தலைமைத்துவத்தை கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பேராயர் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் ”உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இராணுவம், காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் – பேராயர்

ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிறிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறை பிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே மேற்கத்தேய முறைகளின் கீழ் செல்லாமல் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

முகத்துவாரம் புனித ஜோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளிலிருந்து எம்மால் ஒதுங்கியிருக்க முடியாது. மத தலைமைத்துவம் என்பது வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று போதனை செய்துகொண்டிருப்பது மாத்திரமல்ல. மக்களுக்கு துயரம் ஏற்பட்டால், அவர்களுக்காக வீதிக்கு இறங்கி குரல் கொடுப்பதே உண்மையான தலைமைத்துவமாகும்.

இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என அனைவராலும் கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிரிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறைபிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது தேவையாகும். சில நியாயங்களுக்கு அடிமையாகி, வெளிநாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ள நியாயங்களின் பின்னால் செல்வது பிரயோசனமற்றது.

அவற்றின் பின்னால் சென்று நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இலங்கையில் காணப்படும் சுயநலவாத போக்கு முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. மேற்கத்தேய கலாசாரம் எமது நாட்டுக்கு பொருந்தாது. நாட்டிலுள்ள மக்களின் பசியைப் போக்கும் அரசியலே இலங்கைக்கு பொருத்தமானது. அவ்வாறு செயற்படுவதே தலைமைத்துவத்தின் பொறுப்பாகும் என்றார்.

இந்த தடவை மக்கள் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் – கர்தினால் கோரிக்கை

சர்வதேச கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக் கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உள்ளூர் விவகாரங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், தேவாலயத்திற்குள் கைக்குண்டு வைத்தவர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தொல்லை கொடுத்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதற்கும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் கம்பளத்தின் கீழ் மறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக சர்வதேச கடல்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“2024 தேர்தல் ஆண்டு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த முறை சரியான தலைவர்களிடம் மக்கள் தேசத்தை ஒப்படைப்பார்கள் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம், ”என்று அவர் மேலும் கூறினார்

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் கடும் விசனம்

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற் கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது என்றும் பேராயர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடயச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்துகல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சட்டத்தரணிகள் உட்பட சமூகத்தில் பொது மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் தொடர்பில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நியமனமானது நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினால் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது – கர்தினால்

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை, உண்மையை கண்டறியும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை நடாத்திச்செல்லும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிக்னீஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கொழும்பு பேராயர் இதனை கூறினார்.

சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போர்வையில் மக்கள் கருத்து வெளியிடுதல், உண்மையை கண்டறியும் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது அரசியல், மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் – கொழும்பு பேராயர் கவலை

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற பொய்யான கருத்தை வெளியிட கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொய்யான வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், ஜனாதிபதி அவர்களே. இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

20 வீதமான மக்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 80 வீதமான மக்களுக்கு சரியான உணவைப் பெற முடியவில்லை.

கொழும்பு துறைமுகம் டிகோவிட்ட வரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது அரசாங்கம் துறைமுகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.

தற்போதுள்ள துறைமுகம் துண்டு துண்டாக விற்கப்படுகிறது. இந்த மனிதன் என்ன கனவு காண்கிறான்? அவருடைய இலக்கு என்ன? இதுதான் இலக்கு.

முத்துராஜவெல முழுவதையும் அழித்துவிட்டு, இவற்றை வெளியூர்களுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாகச் செத்துவிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிச்சமாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கை தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிருப்தி

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கையில் பொலிஸ் மா அதிபரின் வகிபாகம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பொது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் போன்ற பொறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மிகவும் முக்கியமான பங்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26, 2023 அன்று முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிதுந்த ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உள்ளனர் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய போதே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இத்தாக்குதலில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அப்பாவி மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்தனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் – பேராயர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்? எவ்வாறு சம்பவித்தது என்று முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை.
எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களை தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்;த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.
இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கு அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலனைகு எடுத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதன்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவற்றை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.