மூதூர் தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 17 ஆம் அண்டு நினைவு தினம்

மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்கள் அட்டூழியங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதுடன் கறுப்பு யூலை படுகொலைகள் அரசியல் பேராசை காரணமாக மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியது எனவும் இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டு்ம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்று கறுப்பு யூலைப் படுகொலையை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இந்தியப் பாராளுமன்றத்தில் 1983 இல் இனப்படுகொல என அறிவித்தது போன்று கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அந்த நாளை தமிழினப் படுகொலை நாள் என கனேடியப் பாராளுமன்றத்தில் ஏக மனதாக பிரகடனப் படுத்தினார் பிரதமர் ட்ரூடோ இதனை தமிழ் மக்களின் நீதிக்கான கதவு திறப்பிற்கான ஆரம்பமாக தமிழர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நியாயமான நீதிக்கு குரல் கொடுக்கும் கனேடிய பிரதமரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை வழங்கியுள்ளது.

இலங்கையில் சிங்கள இன வாதிகளின் கனேடிய அரசாங்கம் தொடர்பான அநாகரிகமான விமர்சனங்கள் வருவதை பொருட்டாக கொள்ளாது மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி உள்ளமையை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர் எரிக்வோல்ஸ்

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரி;ப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவு தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

13 இராணுவத்தினர் யாழில் கொல்லப்பட்டதாலேயே கறுப்பு ஜூலை தூண்டப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் தூண்டப்பட்டு 40 வருடங்களிற்கு முன்னர்  இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது என வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

கறுப்பு ஜூலை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

40 வருடங்களிற்கு முன்னர் இன்று  கறுப்புஜுலை என அழைக்கப்படும் தினத்தில் இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது.

யாழ்ப்பாணத்தில் 13 படையினர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் இது தூண்டப்பட்டது. தீவிர காடையர் கும்பல் நாட்டின் தென்பகுதியில் வாழும் தமிழ் மக்களை அர்த்தமற்ற விதத்தில் பழிவாங்கின.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த -மேலும்  மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் வன்முறையில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நாங்கள் நிவைவுகூறுகின்றோம்.

மோதலின் போது 28000க்கும் மேற்பட்ட படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினரும் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக உயிரிழந்தனர்.இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினர்.

எனினும் வன்முறை தீவிரவாதம் அந்த மோதலுடன் முடிவிற்குவரவில்லை நாங்கள் மேலும் துயரம் தரும் பயங்கரவாத தாக்குதல்களையும் தொடர்வன்முறைகளையும் சமீப வருடங்களில் எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கை ஜனாதிபதி தனது 75வது சுதந்திர தின உரையில் நாங்கள் கடந்தகாலங்களை ஆராய்ந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் இதன் மூலம் அனைத்து இலங்கையர்களும் இனமத பேதமி;ன்றி அமைதி சமாதானம் கௌரவத்துடன் நாட்டின் எந்த பகுதியிலும் வாழக்கூடிய ஐக்கிய இலங்கை அடையாளத்தை கட்டியெழுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்துடன் நல்லிணக்கத்தில் முன்னோக்கி நகர்வதற்காக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,இது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்களை ஆற்றுவதற்கும் உண்மையை கண்டறிவதற்குமான  சந்தர்ப்பத்தை வழங்கும்.

அதேவேளை இதற்கு சமாந்திரமாக இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கிய எதிர்கால பாதையில் உள்ளது,இது வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பலனளிக்கும்.

வடக்குகிழக்கிற்கான அபிவிருத்தி திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நல்லிணக்க நடவடிக்கைகளிற்கு அப்பால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான தனது நேர்மையான நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி 13 வது திருத்தம் உட்பட முழுமையான யோசனைகளை வடக்குகிழக்கு  மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும்.

நல்லிணக்கத்திற்கான ஒரு சமிக்ஞையாக 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சார்பிலும்   அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கையின் அனைத்து பிரஜைகள் ஆகிய எங்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

இது தாமதமானது என்றாலும் இன்னமும் இதற்கான நேரம் உள்ளது ( மன்னிப்பு கோருவதற்கு) என தெரிவித்திருந்த அவர் நாங்கள் ஒரு தேசமான குறிப்பாக இலங்கை அரசாக நாங்கள் முதிர்;ச்சியடையவேண்டும்,தேசிய மன்னிப்பை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முதலில் கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் முழு நாட்டிற்கும் நாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுமிகவும் முக்கியமான நடவடிக்கை ஆனால் இதுவே போதுமானது இல்லை.

உலகின் அனைத்து பகுதிகளையும்போல மக்களை துருவமயப்படுத்த பிரிக்க நினைக்கும் சமூகமொன்று காணப்படும்.

ஆனால் இந்த நாட்டின் மக்கள் ஐக்கியப்பட்டு அமைதி ஐக்கியத்திற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது உரிய செயலாகும்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் பொலீஸார் விளக்குகளை உடைத்து அட்டகாசம்

கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கனத்தை மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு பொலிஸ் வாகனங்களை காணமுடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கமுயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர் இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் பொலிஸார் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.

இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து பொலிஸார் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர் .

எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுட்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஐ.நா தாமதிக்காமல் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில்,  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்

மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பில்  கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து  ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh.

இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்  இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized