உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்-

எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை என் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்கள் தரப்பினருடன் பேசும்போது-

“அண்மையில் எனக்கான பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

சட்டமா அதிபர், என்னை தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர் சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்ட விவகாரத்தில், முல்லைத்தீவு நீதிபதி மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரி.சரவணராஜா தற்போது நாட்டில் இல்லை. முறைப்படி விடுமுறை எடுக்கும் செயன்முறையின்படி, இந்தியா செல்வதற்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மலையகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்
அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காணி விடுவிப்பு நல்ல விடயம்; மக்கள் அங்கே செல்லும் போது கைது செய்து நீதிமன்றம் அனுப்பக் கூடாது – செல்வம் எம்.பி

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் முடிவிலே இடம்பெறும் பிரச்சினைகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றபடியால் இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வனஇலாகா பொறுப்பதிகாரிகள் இங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் கொடுத்த பல இடங்களில் தற்போது சில இடங்கள் விடுவிக்கின்ற முடிவை எட்டியிருக்கின்றன.

அதேபோல் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளாக இருந்தாலும் இங்கு இருக்கின்ற அதிகாரிகளினால் இயலாத ஒரு நிலை ஏற்படுகின்ற போது அதனை நடுவர் குழுவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதனை பெரிதாக எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் இது மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அந்த மக்கள் அங்கே செல்கின்ற போது கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கோரியிருக்கின்றோம். பல விடயங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வுகளை கண்டிருக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க அரசாங்கம் ஒப்புதல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று களஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் பிரிவில் இருந்து நிதி கிடைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது” என்றார்.

சமாதானத்தை ஏற்படுத்தவே குருந்தூரில் சைவ வழிபாடுகளை நிறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவிப்பு

சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேதான் குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி சைவத் தமிழ் மக்களின் வழிபாடுகள் தடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிசார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்தினைப் பெறுவதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் 08ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ச்சென்ற சைவத் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக கடந்த 13.07.2023அன்று, முல்லைத்தீவு பொலிசாரால் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டு, மறுநாளான 14.07.2023 குருந்தூர்மலையில் இடம்பெற இருக்கின்ற சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகளைத் தடுக்குமாறு நீதிமன்றினைக் கோரியிருந்தனர்.

இருப்பினும் பொலிசாரின் இக் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந் நிலையில் கடந்த 14.07.2023ஆம் திகதிகுருந்தூர்மலையில், சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள், பொலிசாராலும் அங்கு குழுமியிருந்த பௌத்த தேரர்களாலும், பெரும்பான்மையின மக்களாலும் தடுக்கப்பட்டது.

இவ்வாறு சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 14.07.2023அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 17.07.2023 அன்று சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே AR673/18 என்ற குருந்தூர்மலை வழக்கு நகர்த்தல் பத்திரம் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்து.

குறித்த வழக்கிலே ஆலய அடியவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் மன்றில் தோன்றியிருந்தனர்.

அந்தவகையில் சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்று, பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய அடியவர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் விளங்கமளிப்பதற்காக நீதிமன்றிலே தோன்றியிருந்த பொலிசார், தாம் சமாதானப் படுத்தும் நோக்கிலேதான் தாம் பொங்கல் வழிபாட்டினைத் தடுத்ததாக கூறியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மேலதிக தகவல்களைத் தொல்லியல் திணைக்களத் திடமிருந்தும்பெறவேண்டியதொரு தேவையிருப்பதால், குறித்த நாளில் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்லியல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் பாதம் 08ஆம் திகதிக்கு குறித்த வழக்குத் தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லை எனவும், அவ்வாறான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு அண்மையில் புதைகுழிக்கு அருகில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த இடத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 16 மனித எலும்புகள், பல புலி சீருடைகள், ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த பொருட்கள் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு திணைக்களம் இணைந்து கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியை அகழ்வு செய்து வருகின்றனர்.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு கைவேலியில் வனவளத் திணைக்களத்தினர் முன்னாள் போராளிகளின் வீடுகளை அழித்து பெண்கள் மீதும் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள்  முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில்  2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு  குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

இந்நிலையில் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர் .

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள்  கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (12) மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொளுத்துவதற்காக மண்ணெண்ணெயுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை வனவள திணைக்கள  அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணெய்யை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி  மற்றும் பொலிசார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10) ஒன்பது  பேர்  வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்துவிடக்கூடாது என அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இலங்கை சிங்கள பௌத்த நாடு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன. குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன. குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்தபோது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.

அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் குருந்தூர் மலையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிடும் அதிகாரமும் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஒருசில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்பதையும் உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குருந்தூர் மலையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாது காக்க சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணையவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்-என்றார்.