உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்-

எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை என் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்கள் தரப்பினருடன் பேசும்போது-

“அண்மையில் எனக்கான பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

சட்டமா அதிபர், என்னை தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர் சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்ட விவகாரத்தில், முல்லைத்தீவு நீதிபதி மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரி.சரவணராஜா தற்போது நாட்டில் இல்லை. முறைப்படி விடுமுறை எடுக்கும் செயன்முறையின்படி, இந்தியா செல்வதற்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மலையகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.