இலங்கையின் கிரிக்கட் தொடர்பில் தொலைநோக்குப் பார்வை இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி, பின்னர் விளையாட்டு சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் 2014 பந்துவீச்சு 20 (T20) உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்துவம் இதன்போது வழங்கப்பட்டது. மேலும் பல வருடங்களாக கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பங்களிப்புச் செய்த உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வாழ்நாள் அங்கத்துவம் அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்கவினால் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.

ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனைக் கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்திருக்கிறோம், அந்தக் காலத்தைக் கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவுசெலவுத்திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது, வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

2030 இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்திற்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.

இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது. மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடபபட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.

நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.

மேல்மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும். எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம். மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, தற்போதைய மற்றும் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கழக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த அரசிற்கு சொந்தமான இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் முதற் கட்டமாக 40 பேர்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி. அதுல பதிநாயக்க 150 வருடங்கள் பூர்த்தியாகும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு துண்டு காணி கூட கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமைக்காக நன்றி கூறினார்.

மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அது புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாசவையும் ,பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் புலிகளின் சின்னங்களுடன் நினைவுகூர்ந்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் ஜனாதிபதி

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” சனிக்கிழமை (02) முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth) ஆகியோரின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மேற்படி யோசனையை முன்மொழிந்தார்.

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இது அரசாங்களினால் மாத்திரம் முன்னெடுக்ககூடிய செயற்பாடு அல்லவென்றும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் அதிகமான தொகை இஸ்ரேல் மற்றும் காஸா எல்லைகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றங்களுக்காக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வாகவே காலநிலை நீதிமன்றத்தை முன்மொழிந்திருப்பதால், அதனுடன் இணைந்துகொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இலங்கை முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான பங்குதாரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐரோப்பிய சங்கத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒன்கர் அண்டர்சன், காலநிலை அனர்த்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு அவசியமான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முயற்சிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக காலநிலை நீதிமன்றம் செயற்படும் என்றும் அதனை வரவேற்பதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல

காலநிலை அனர்த்தங்களுக்கு வலுவாக ஈடுகொடுப்பதற்கு காலநிலை நீதிமன்றம் போன்ற முன்னெடுப்புக்கள் அவசியம் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான தற்போது முன்னெடுக்கப்பட்டும் கலந்துரையாடல்களுக்கு மேலதிகமான பல்வேறு முயற்சிகள் அவசியப்படுகின்றன. நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய களத்தை அமைப்பதற்காக காலநிலை நீதிமன்றம் தொடர்பான யோசனையை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் உள்ளடக்கவுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

காலநிலை நீதிமன்றத்தை அன்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு, இதன்மூலம் வலுவான தலைமைத்துவத்தை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, மதுர விதானகே, அஜித் மானப்பெரு, எம்.ரமேஸ்வரன் ஆகியோருடன் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு முழுமையான உரிமை உண்டு – ஜனாதிபதி ரணில்

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.

தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலின் கரங்களை தமிழ்க்கட்சிகள் பலப்படுத்த வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதைவிடுத்து வெளியில் இருந்துகொண்டு ஜனாதிபதியையும், அரசையும் தமிழ்க் கட்சிகள் சாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். கஜேந்திரகுமாரையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். விக்னேஸ்வரனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம்.

ஆனால், இந்த மூன்று தரப்பினரும் வெளியில் இருந்துகொண்டு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும்.

அவர்கள் வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. தீர்வை வென்றெடுக்கத் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அமைச்சரவையில் பாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோசடிகளை வெளிப்படுத்திய நபரை விளக்கிவிட்டு மோசடி குழுவினரை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் என்னுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

இதன் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சரை வரவழைத்து இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீடுகளுடன் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே நான் அவரை அழைத்தேன்

நான் கிரிக்கெட் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே செயற்பட்டேன்.

அவ்வாறு இல்லாமல் ரொசான் ரணசிங்கவை இணைத்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக நான் அவரை அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் என்னை சந்தித்ததன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களும் என்னை வந்து சந்திக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எனது உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் ரணிலும், சாகலவுமே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்

தனது உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் ஒன்றியத்திற்கு சென்று கூறுகின்றார் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்று.

அதற்காக செயற்படுகின்ற என்னை வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.

பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.

அவ்வாறு இல்லையெனின் போதைபொருள் கடத்தல்காரராக சித்திரிக்க முயற்சிப்பார்கள்.

ஒரு அமைச்சராக உள்ள என்னுடைய பாதுகாப்பில் அரசியல் மற்றும் நீதித்துறையின் தலையீடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

இது அரசியலில் ஒரு புதிய பிளவாக இருக்க வேண்டும். அதில் என் உயிர் போய்விடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம்.

அது நாளையா, இன்றோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மற்றும் அதற்கு சாகல ரத்நாயக்க பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இந்த 134 வாக்குகளை அவருக்கு அளித்தது அவர் ஜனாதிபதியாகி எம்மைப் பழிவாங்குவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனக்கு வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தாருங்கள். வேறு நாடுகளுக்கு அடைக்கலம் கோரி செல்ல நான் தயாராக இல்லை.

கிரிகெட் பிரச்சினை தற்போது முடிவடையவில்லை என்றால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக இந்த பிரச்சினையை முடிப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

Posted in Uncategorized