நியாயமற்ற வரிக்கொள்கை, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், பெட்ரோலிய, மின்சக்தி, துறைமுகம், ரயில்வே, ஆசிரியர் மற்றும் தபால் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள துறைமுக தொழிற்சங்கங்கள் , இன்று பகல் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டன.
நியாயமற்ற வரிக்கொள்கையை விரைவாக மாற்றுமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியை மறித்து சுமார் ஒரு மணித்தியாலம் துறைமுக தொழிற்சங்கத்தினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
துறைமுக தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பினர் திருகோணமலை சீனன்குடா துறைமுக சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில்முறை தொழிற்சங்க ஒன்றியத்தின் பங்குதாரரான இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
குருநாகல் மாவட்ட வங்கி ஊழியர்களும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. நாட்டில் பல பகுதிகளிலும் இன்று வங்கி சேவைகள் முடங்கியிருந்தன.
புத்தளம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வங்கிகள் முழுமையாக இன்று மூடப்பட்டிருந்தன.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊழியர்களும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று முற்பகல் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று பகல் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.
சுகாதார தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கம்பளை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள், வைத்தியர்கள் , ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்திலிருந்து கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதி வரை பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மாத்தளை, புத்தளம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டன.
பாடசாலை ஆசிரியர்கள் கறுப்பு ஆடையணிந்து இன்று பணிக்கு சமூகமளித்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து கொட்டாவையில் இன்று மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களும் அதிபர்களும் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு பட்டி அணிந்தும் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.
கம்பளையில் அதிபர்கள், ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கம்பளை ரயில் நிலையத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நாவலையில் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அம்பாறையில் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டன.
தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இரத்மலானை தலைமை அலுவலகத்தில் இருந்து சொய்சாபுர வரை இன்று காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை ரயில்வே தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.