முல்லைத்தீவில் ஓ.எம்.பி அலுவலகம் விசாரணையை முன்னெடுக்க முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனாருக்கான அலுவலகம், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 244 பேருக்கு விசாரணைக்கான அழைப்பையும் விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போரில் சரணடைந்த எழிலனை மன்றில் முன்னிலைப்படுத்துக: இராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எழிலனை (சசிதரன்) அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் முன்னிலைப் படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இறுதிப் போர் நடவடிக்கை யின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன. விசாரணைகளின் நிறைவில், அந்த நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றுக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த
அறிக்கை மீதான மேல் நீதிமன்றின் தீர்ப்பு நேற்று வழங்குதவாக இருந்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பு தயாரித்து முடிக்கப்படாத நிலையில் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற வழக்குகளில் 5 வழக்குகளின் விசாரணைகளில் முதலாவதில், குறிப்பிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பில் இராணுவத்தினர் திருப்திகரமான பதிலை முன்வைக்கவில்லை என்று தெரிவித்தது. மனுதாரர் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை மறுப்பதற்கான விடயங்களை இராணுவத்தினர் மன்றில் இன்று (நேற்று) முன்வைக்கவில்லை என மனுதாரர் சார்பில் வாதாடிய சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் தெரிவித்தார். எனவே, மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம், ஆட்கொணர்வு மனுவின் எழுத்தாணையை அனுமதித்த நீதிமன்றம், அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மற்றைய வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்காதமையால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏனைய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் மேலும் தெரிவித்தார்.

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது:செல்வம் எம்.பி

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும். தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற ரீதியிலே அவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று போராடி கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு இது பதிலாக அமையாது.

இந்த விடயத்திலே நீதியமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூற வேண்டும். அவர்கள் விடயத்தில், உயிருடன் இராணுவத்திடம் ஒப்படைத்த பின்பு நடந்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் விஜயதாச ராஜபக்ச கூறுகின்ற போது தான் எங்களுடைய தரப்பிலே அதனை எப்படி நோக்கலாம் என்பதனை கூற முடியும். ஆகவே உண்மைத்தன்மையை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியே கொண்டு வர வேண்டும். அவர்கள் உயிரோடு இல்லை என்ற சாட்டுப்போக்கை கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாருடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம். ஆகவே அவர்கள் உயிரோடு இல்லை என்றால் என்ன நடந்தது? படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? அல்லது அனைவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படையாக கூற வேண்டும்.

மறைத்து கதை சொல்வது என்பது நிறுத்தபட வேண்டும். வருடக்கணக்கிலே தாய்மார்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கான நியாயம் கிடைக்காதவரை இதற்கான போராட்டம் தொடரும். உயிருடன் ஒப்படைத்தவர்களை உயிரோடு இல்லை என கூறுகின்றீர்களெனில், அவர்கள் யாரால் கொல்லப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூற வேண்டும். அது தான் நேர்மையான அரசியல் வாதி. அரசாங்கம் மக்கள் சார்ந்த விடயத்தில் அக்கறையோடு இருக்கிறது என்பதனை இந்த விடயங்களில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கலாம்.

பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டாபய ராஜபக்ச அவர்களுடைய காலத்திலே கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்டவர்கள் பின்னர் அவர் ஜனாதிபதியாக வந்தும் அதற்கான பதில் கூறவில்லை. தற்போது அமைச்சர் இந்த கருத்தை கூறுகின்ற சூழலிலே கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் அல்லது இராணுவம் அவர்களை படுகொலை செய்தது என்பதனை இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை தர வேண்டும் என்பது தான் நேர்மையான விடயமாக இருக்கும். ஆகவே நீதியமைச்சர் வெளிப்படை தன்மையோடு பேச வேண்டும். சாட்டுப்போக்கான பதில்களை கூறி தாய்மார்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.”என தெரிவித்துள்ளார்.