உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என ரணில் விக்கினேஸ்வரனுக்கு அறிவிப்பு

தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைக்குள், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக கொண்டுவர முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்திய தர்ப்பில் மத்தியஸ்தர் ஒருவரை அழைத்துவர நேரும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்தியஸ்தம் அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்டன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும்.

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

நியாயமான அதிகார பரவலாக்கத்துடனான  சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும். ஒற்றையாட்சி முறைமை அமுலில் இருக்கும் வரை புலம் பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை, நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரவு செலவுத்திட்டத்தில் அவதானம் செலுத்தப்படாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக கருதப்படுகிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு செலவுத் திட்டத்தினூடாக 530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மக்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் காணிகள் அதிகளவில் இராணுவத்தினர் வசமுள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இராணுவம் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்குள்ள காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும்.

எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய அரசுக்கு தேவையானதாக இருக்காது.

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்றார்.