இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரை) நிறைவுசெய்தார்.
அவர் தமது இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுபீட்சத்துக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில், இளம் தலைவர்கள், தொழில்முனைவோர், பொருளடக்க படைப்பாளிகள் (content creators), சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டார்.
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பொன்றின் போது, துணை இராஜாங்க செயலாளர் அலனும் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பங்காண்மை தொடர்பில் கலந்துரையாடியதுடன், துடிப்பான தகவல் பரப்பொன்றுக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையலான பிணைப்பையும் கோடிட்டுக் காட்டினர்.
அத்துடன், அனைவரையும் உள்வாங்கிய ஆட்சிமுறைமைக்கான பிராந்திய மாதிரியொன்றாக உருவெடுப்பதற்கான பாதையொன்றை வகுப்பதற்கான இலங்கைக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்றுக்கொண்டனர்.
ஜனநாயக சமூகங்களில் ஊடகங்களின் இன்றியமையாத வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்தி கொழும்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்டோர் துணை இராஜாங்க செயலாளர் அலனின் உரையை செவிமடுத்தனர்.
பல தலைமுறைகளாக அரசாங்கங்களும் ஊடகங்களும் சிக்கலானதொரு, சில சமயங்களில் எதிர்வாதங்களுடன் கூடிய உறவை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. இந்த செயற்பாடு எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமானது கிடையாது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், இரு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்துமான ஜனாதிபதிகள் ஊடகங்களுடனான முரண்பாட்டின் அவரவரது பங்கை அனுபவித்துள்ளனர். ஜனநாயக சமூகங்களின் அடையாளமொன்றான இந்த பதற்றமானது வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் பயனுறுதிமிக்க நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியமான வகிபாகமொன்றை வகிக்கின்றது என்று துணை இராஜாங்க செயலாளர் அலன் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஐடியாஹெல் ஸ்டூடியோவில் (IdeaHell studio) அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் நடைபெற்ற கிரியேட்டர் எக்ஸ் (Creator X) செயலமர்வின் போது, துணை இராஜாங்க செயலாளர் டிஜிட்டல் டர்ட்டல்ஸின் (Digital Turtles) படைப்பாளர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், கருத்துச் சுதந்திரம் தான் எந்தவொரு ஜனாநாயகத்தினதும் முக்கிய அடிப்படை அம்சமாகும். இன்றைய தினத்தின் ஒன்றுகூடல்கள் போன்றவை அதன் நீடித்த விழுமியத்திற்கான சான்றொன்றாகும்.
பல்வேறு மொழி மற்றும் கலாசார பின்னணியில் இருந்தான படைப்பாளிகளை முதன்முறையாக ஒன்றுசேர்த்திருப்பது இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் மற்றும் வலுப்படுத்தும் விவரணங்களை செதுக்குவதில் உங்களது பணி முக்கியமானதாகும். பொருளடக்க படைப்பாளிகள் என்ற வகையில், நீங்கள் ஜனநாயக சமூகங்களை வடிவமைக்கும் உரையாடலை கட்டமைக்கின்றீர்கள் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
கங்காராமய விகாரை தொடக்கம் புனித அந்தோனியார் தேவாலயம், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் மற்றும் சம்மாங்கோடு பள்ளிவாசல் வரை என கொழும்பிலுள்ள பல்வேறு மத சமூங்கள் தொடர்பான கற்றல் பயணமொன்றை மேற்கொண்டு துணை இராஜாங்க செயலாளர் இலங்கையின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மை பற்றி அறிந்துக் கொள்வதில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வேகா இன்னோவேஷன்ஸ் (VEGA Innovations) மின்சார முச்சக்கரவண்டியில் கொழும்பின் வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் நிலையான போக்குவரத்தில் புதுமையான முன்னேற்றங்களை அவர் கண்டார். அமெரிக்கா வேகா மற்றும் முக்கியமான தனியார்துறை நிறுவனங்களுடன் பங்காண்மையில் ஈடுபட்டு இலங்கையின் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புத்தாக்கத்தையும் வளர்ச்சி தூண்டலையும் அதிகரிப்பதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றத்தினருடனும் துணை இராஜாங்க செயலாளர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினரில் முதலீடு செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடானது செழிப்பான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இலங்கையை வடிவமைப்பதில் இளையோரின் முக்கியமான வகிபாகத்தை அங்கீகரிப்பதில் இருந்து உருவாகிறது என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள அமெரிக்க தூதரகத்தின் வருடாந்த இளைஞர் தலைமைத்துவ மாநாடானது, புத்தாக்கத்தை தூண்டும் மற்றும் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும் உரையாடல்களை போசிக்கும் மற்றும் திறன்களை வளர்க்கும் நிமித்தம் இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் நிலவும் காலநிலை மாற்றம் பேன்ற அழுத்தமான விவகாரங்களின் பின்னணியில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் அயல் நாடுகளில் இருந்தான இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு பிராந்திய முன்மாதிரியாக செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொது இராஜதந்திரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன், அமெரிக்க மக்களுக்கும் மற்றும் ஏனைய நாடுகளின் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். ஊடகங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் வெளிநாட்டு அவையோர் / பார்வையாளர்களுடனான இராஜாங்க திணைக்களத்தின் ஈடுபாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அவர் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.