கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறினர் முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பின் விடுவிக்கப்பட்ட 3 பேரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

Posted in Uncategorized

ஈழத்தமிழர்களுக்காக இந்தியப் பிரதமர் மோடியிடம் தனிநாடு கோரிய மதுரை ஆதீனம்

இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென இந்திய பிரதமரிடம், மதுரை ஆதீனம் நேரில் கோரிக்கை விடுத்தர். நேற்று (27) தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மோடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்ற போது, அவரிடம் மதுரை ஆதீனம் நேரில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பின்னர் மதுரைக்கு ஹெலிகொப்டர் மூலம் மாலை வந்தார்.

மதுரை வீரபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெற்ற சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

பின்பு அங்கிருந்து கிளம்பி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார்.

கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சந்நிதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், சுந்தரேஸ்வரர் சந்நிதியில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தை பார்வையிட்டு வணங்கினார்.

சுவாமி தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வாகனத்தில் புறப்பட்டவர் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து கும்பிட்டபடி சென்றார்.

இதனைத்தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் பிரதமர். 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில் இரண்டாவது முறையாக தரிசனம் செய்துள்ளார்.

இரவு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்’ என பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மடத்தின் முன்பாக பொதுமக்களுடன் மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் முன்னே செல்லும் போது அவரால் பாதுகாப்பு கெடுபிடிகளால் முன் செல்ல முடியவில்லை. எனினும் பிரதமர் மோடி அவரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி மதுரை ஆதீனத்தை அழைத்தார். பிரதமர் அழைத்ததை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன் நகரவிடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின்னர் பிரதமர் மோடி அழைத்ததை சொன்ன பிறகு தான் அனுமதிதனர். காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” என்றார்.

இலங்கை திரும்ப இருந்த நிலையில் சாந்தன் மாரடைப்பால் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

இன்று இரவு இலங்கைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னர், சாந்தனின் வேண்டுகோளை அடுத்தும், உயா் சிகிச்சைக்காகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய மத்திய அரசால் ஏன் தடுக்க முடியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா “கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் “கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் கட்சி ஆரம்பம்

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

Posted in Uncategorized

சென்னையில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மறைந்த மாமனிதன் விஜயகாந்த், அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (MP ) இன்று சென்னையில் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமிழ் ஈழ மக்கள் சார்பாக கேப்டனுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.

மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம்

மன்னார், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

விசாரணையின்போது அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பிரச்சினையை தமிழ்நாடு அரசுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன – முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வின் போது அவர் இதை பேசினார்.

‘இலங்கையில் உள்ள பிரச்சனையை… இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது உண்மை. அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை… இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவில்லை,

தமிழக அரசுக்கு அங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்று புரியவில்லை. ஏனெனில் இலங்கையில் இது மிகவும் வித்தியாசமானது. இலங்கையில் தமிழ் சமூகத்தில், பல துணைக்குழுக்கள் உள்ளன. இது அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

எனது தாத்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1920களில் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்காக இலங்கை சென்றார். ஆங்கிலேயர்கள் எங்களை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் இலங்கையில் எங்கள் தலைமுறை உருவானது. நாங்கள் அனைவரும் மத்திய மலைநாட்டில் வளர்ந்தோம். நாங்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்… அவர்கள் பேசும் விதம், ஸ்லாங் வேறு, ஆனால் மொழி ஒன்றுதான்.

எனவே சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள் அனைவருடனும் இணக்கமாக வாழ விரும்பினோம்.

இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தனது நாட்டில் உள்ள பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.

போர் மற்றும் என்ன நடந்தது என்பது பற்றி நான் எதுவும் கூறாததாலும், நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்பட்டதாலும்… 5-10 சதவீத அரசியல்வாதிகள் நான் இனத்திற்கு துரோகி என்று நினைக்கிறார்கள்’. இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நடந்த போராட்டங்கள் குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசுகையில், சேதுபதியை நடிக்க வைப்பது பிரச்சனையாகிவிடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்றார்.‘ஒரு விளையாட்டு வீரரைப் பற்றிய ஒரு ஊக்கமளிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவில்லை. அதை ஒரு வகையான பிரச்சாரம் என்று நினைக்கிறார்கள்… மேலும் பல அரசியலும் படங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது. அரசியல் மற்றும் திரைப்படங்களைப் பற்றி பேசுவதில் தவறில்லை, ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்ய முடியாமல் இருப்பது உங்களை மூச்சுத் திணறச் செய்வது போன்றது.

எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. விஜய் சேதுபதி ஒருபோதும் விலக விரும்பவில்லை, ஆனால் பிறகு அவர்தான் ஏன் இவ்வளவு வம்புகளை உருவாக்க வேண்டும் என்றார்? அதனால் வேறு நடிகரைத் தேடினோம்’, என்று ஸ்ரீபதி கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவரால் சக்கிங் என்று புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த முரளிதரன்,

1995 இல், நான் சிக்கலில் இருந்தபோது – நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், இலங்கைக்காக விளையாடினேன், அப்போது தமிழ்ப் போர் உச்சத்தில் இருந்தது. மதம் அல்லது எதையும் பார்க்காமல் இந்தியாவைப் போலவே இலங்கையும் எனக்கு ஆதரவளித்தது.2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும் முரளிதரன் நினைவு கூர்ந்தார்.

’அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் வாத்துகளைப் போல உட்கார்ந்து இருந்தோம். எங்கள் பேருந்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை’… என்றார்.

Posted in Uncategorized