தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் ஜனவரி 23 வரை ஏற்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இன்று(04) வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தலில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், கட்டுப்பணத் தொகை, வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தலே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளது

வடக்கு கிழக்கில் சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில் போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – விஜயதாஸ ராஜபக்‌ஷ

தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு செலவு செய்யும் நிதி தொகையை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் காலத்தில் அதிக நிதியை செலவு செய்வதை மட்டுப்படுத்துவதல் மற்றும் தேர்தல் காலத்தில் அவர் வர்த்தகர்களுடன் முன்னெடுக்கும் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யும் நிதி தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களை ஆணைக்குழுவிற்கு அழைத்து தேர்தல் தொடர்பான செலவுகளையும்,நிதி கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் ஊடாக அரச சொத்து, அரச நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேட்பாளருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் இடம்பெற்று மூன்று வார காலத்திற்குள் உரிய வேட்பாளர் தேர்தலுக்கு தான் செலவு செய்த நிதி, அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சத்திய கடதாசி ஊடாக அறிவிக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் வகிக்கும் அரசியல் உறுப்பாண்மை பதவிகளை இரத்து செய்யவும் புதிய விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தல் காலம் தாழ்த்தப்படின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்குமானால் அதனை தடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் விரைவில் புதிய ஆட்சி உருவாக தேர்தல் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு தீர்மானித்தன் பின்னர், நீதிமன்றம் அதற்கு முரணான தீர்ப்பை வழங்கினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய நாடாளுமன்றமும் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கையில்லாத இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாக்கும் என நம்புகிறோம்.

ஜனவரி மாதம் 4ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமாயின் பெப்ரவரி 25 முதல் மார்ச் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலத்தில் புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 8 ஆம் திகதி குறிப்பிட்டது,ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி மாதம் 04ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியது,

இந்த வாக்குறுதியை ஆணைக்குழு பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை  எதிர்வரும் மாதம் (ஜனவரி) 09 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு 5 முதல் 7 வார காலத்திற்குள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்றாடும் ரணில் அரசாங்கம் – கிரியெல்ல

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (டிச. 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2017 மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்ப்பளித்துள்ளது.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவது கட்டாயமாகும். தேர்தலை பிற்போடுவதற்கான உரிய காரணம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாத (டிசெம்பர்) இறுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதி பகுதி,அடுத்தமாதம் முதல் வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை இதுவரை ஆணைக்குழு அறிவிக்கவில்லை என்றார்.

போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – நிமல் சிறிபால

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தொடர்பில் தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயக போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.

அரகலயவில் முன்னின்று செயற்பட்ட கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்தளவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் அனைவரையும் மக்கள் தமது பிரநிதிகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.நாட்டு மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அரசியல் ரீதியான தீர்மானத்தை சிறந்த முறையில் எடுக்கமாட்டார்கள்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களின் 8800 உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5100 ஆக குறைப்பதற்காகவே புதிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என்றார்.

ஆணைக்குழு தேர்தல் திகதியை உறுதிப்படுத்தாவிடின் நீதிமன்றத்தை நாடுவோம் – பவ்ரல்

ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை சட்ட ரீதியில் வெளிப்பட்டு இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்காக பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதுவரைக்கும் கையாளப்பட்டு வருகின்றன. எந்த நிலைமையிலும் சரி தேர்தலை நடத்தியாகவேண்டி இருக்கின்றது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நேரடி தீர்வாக இல்லாவிட்டாலும் ஜனநாயக வரைப்புக்குள் உரிய காலத்துக்கு சட்ட ரீதியில் தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 19ஆம் திகதி ஆகும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்படவேண்டும். அதனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் அறிவிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதேவேளை, தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்திருப்பதாக தெரியவருகின்றது.