13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; சுதந்திரக் கட்சி உறுதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015, 2019 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் பணிகள் இடம்பெற்றபோதும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போதுமட்டும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

ஏனெனில், அது தெற்கு சிங்கள மக்களை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சி என்ற ரீதியில் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தநிலைப்பாட்டுடன், நாம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் சட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதிய சட்டம் மூலம் அரசு தட்டிப் பறிக்க முடியாது.

ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இந்த அரசு ஏன் அஞ்சுகின்றது? எமது நல்லாட்சி அரசையும் சில ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. அதை நாம் எதிர்கொண்டோம்.

விமர்சனங்களை எதிர்கொள்ள – அவற்றுக்குத் தகுந்த பதில் வழங்க அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். – என்றார்.

வடக்கு கிழக்கில் சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில் போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாவை பதவியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல்- சந்திரிகா குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாக கூறிய சந்திரிகா, இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக சுதந்திரக் கட்சியை பயன்படுத்த ராஜபக்ஷர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர கட்சி இன்றும் என்னுடனேயே இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

காணொளி பதிவொன்றை வெளியிட்டு அதில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. இதற்கு நானும் பொறுப்பு கூற வேண்டும் என்று சில சந்தர்ப்பங்களில் தோன்றுகிறது. எனது பெற்றோரதும், என்னுடையதும் அர்ப்பணிப்பினால் சுதந்திர கட்சிக்கு 23 ஆண்டுகள் ஆட்சியில் நிலைத்திருக்க முடிந்தது.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டுக்கும் சுதந்திர கட்சிக்கும் ஏற்பட்டிருந்த நிலைமையை கவனத்தில் கொண்டே 9 ஆண்டுகளின் பின்னர் நான் மீண்டும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். 2015 இல் தனித்தே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் போது நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

3 ஆண்டுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டம் எம்மால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட தனியொரு நபரால் முழுமையாக வீழ்ச்சியடை செய்யப்பட்டது. பண்டாரநாயக்க கொள்கையை எதிர்த்தவர்கள் , எனக்கும் இடையூறு விளைவித்தனர். என்னை கொலை செய்யுமளவிற்கு சதித்திட்டம் தீட்டினர். 2015இல் கட்சி கட்டியெழுப்பப்பட்ட போதிலும் , மைத்திரிபால சிறிசேன ஏனைய தரப்பினருடன் இணைந்து அதனை சீரழித்துள்ளார்.

என்னை கட்சியிலிருந்து புறந்தள்ளினர். சிரேஷ்ட தலைவர்கள் பலரின் இரத்தத்தினால் உருவான இந்த கட்சியை எவரும் அழிக்க முடியாது. கட்சி பலமடைய இன்னும் சிறிது காலம் செல்லும். ஆனால் நிச்சயம் அது இடம்பெறும்.

அன்று நான் இவ்வுலகில் இருப்பேனா என்று தெரியாது. எவ்வாறிருப்பினும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய இளம் தலைமுறையினரை நான் உருவாக்கிச் செல்வேன். யார் எதைக் கூறினாலும் நான் சுதந்திர கட்சிலேயே உள்ளேன். சுதந்திர கட்சியும் என்னுடனேயே உள்ளது என்றார்.