உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை !

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது.

வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்த நிலையில் இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனக வக்கும்புர கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று இவ்வருடம் இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினமான செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மதிக்கவில்லை ; பவ்ரல் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் என கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தை தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருவது இன்று தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது எனறார்.

Posted in Uncategorized

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேர்தல் சட்டங்களில் திருத்தம்

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டின 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வலுவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான இடைநேர் விளைவான கருமங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி 23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவின் அழுத்தத்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்றும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே பொருளாதாரத்திற்கு பாதிப்பு என குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

தேர்தலை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த ராஜபக்‌ஷ

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் குறித்தும் இதன்போது ஊடகவியாளர்களினால் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் தற்போது நாட்டில் சுதந்திரமான ஊடகம் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தல் அவசியம்

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கட்டானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள அவர் தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத்தேர்தல் அவசியம் என அவர்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிபிழைத்து வாழ்வது என்பது குறித்து சிந்திப்பவர்கள் மூலம் உங்களிற்கு எதிர்காலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தலிற்கு அழைப்பு விடுக்கின்றோம்,இதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் எனகர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகளை ஒடுக்குவதற்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதையே நாங்கள் இன்று பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழிவுகளை பரிசீலித்து மூன்றாம் வாரத்தில் எல்லை நிர்ணயம் குறித்து இறுதி அறிக்கை

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து, தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து குழுவின் இறுதி அறிக்கை இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆகக் குறைக்கும் நோக்கத்துடன் 2020 இல் தேசிய எல்லை நிர்ணயக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், உள்ளூர் அளவில் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது

வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கடமையில் இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.