வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ‘ வெடுக்குநாறி,மாதவனை,குருந்தூர் எங்கள் சொத்து’ என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து ‘நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ‘ என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது.
நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார்.
பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம்,எஸ். சிறிரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வேலுகுமார்,உதயகுமார்,இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,பொய் வழக்கை வாபஸ் பெறு,அப்பாவிகளை விடுதலை செய்,குருந்தூர் மலை எங்கள் சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக உரையாற்றினார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ‘ என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும் ‘என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல ‘கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இது முற்றிலும் தவறு ‘என்றார்.
சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள்’தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,குருந்தூர் எங்கள் சொத்து’ என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்’ மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும்.கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள்,மத சுதந்திரம் வடக்குக்கும் ,தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார்.
இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா’தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்’ என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்’ அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது ‘என்றார்.தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று ‘பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.நீங்கள் பதிலளியுங்கள் என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ‘ சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது’ என்றார்.
பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது.நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம்.எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து ‘சோ’ காட்டுகிறார் .இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ பெரும்பாலானோர் ‘சோ’தான் காட்டுகிறார்கள் என்றார்.தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் இருந்தவாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ’ குணவர்தன ‘சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள்.இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள்.சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.
இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து’ கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே 08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ’08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ‘ என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ‘ நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச’ நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ‘தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ‘தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார்.
இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘ இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ‘ என்று சபைக்கு அறிவித்தார்.