ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விஜயம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை.
சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக வவுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர்.
இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும், அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே அங்கு குழுமியிருந்தனர்.
ஆனால் அங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காகவும், சர்வதேசத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர்.
அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர். இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அந்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கான தீர்வை அதிலே வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.
இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களும் ஊடகங்களுக்காவே பேச முடியும். மக்களி திருப்திப்படுத்த, பொய் வாக்குறுதியாகலிக்கொடுக்கவே இங்கு பேச முடியும். ஏனெனில் இங்கு நாம் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சபாநாயகரினாலோ அல்லது சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராலோ பதிலோ, தீர்வோ வழங்க முடியாது. சபைக்கு அமைச்சர்களும் வருவதில்லை. எனவே தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கை நூறு வீதம் உள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த திருட்டுத்தனமான பயணம் எதற்கு என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் உள்ளது. இதற்கான விடையை எங்கிருந்து எதிர்பார்ப்பது?
அதுபோன்றே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.
ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்?
மன்னாருக்கு சென்ற ஜனாதிபதி ஒரு சிறு கிராம மீனவர்களை மட்டும் சந்தித்து விட்டு மீன்பிடி சங்கங்கள், சமாசம் போன்றவற்றை சந்திப்பதனை தவிர்த்தது ஏன்? வடக்கில் ஒரு விமான நிலையம் இருந்தும் அதனை இயக்க முடியவில்லை. அதில் உள்ள தடைகளை இந்தியாவுடன் பேசி தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வவுனியாவில் ஒரு விமான நிலையம் அமைக்கபபோகின்றார்களாம், ஒன்றையே இயக்க முடியாதவர்கள் எப்படி இன்னொன்றை இயக்குவார்கள்?எனவே ஜனாதிபதியின் வன்னிக்கான விஜயத்தில் இது போன்ற பல சந்தேகங்கள் எமக்குண்டு என்றார்.